சட்டங்களுக்கு பயந்து தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க முடியாது – நாடு கடந்த அரசு

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு தாயகம், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவம் வகையில் முன்மொழிவொன்று வரையப்பட்ட நிலையில், அந்த முன்மொழிவு ஆவணத்தில் தீவிர நிலைப்பாடுடைய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து செயற்பட்டால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கும் கடிதமொன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும், எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பி வைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

“தமிழ் மக்களுக்கான பரிகாரநீதியைப் பெற, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு சமனான சர்வதேச நீதிப்பொறிமுறையிலோ சிறிலங்கா அரசை பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர் தரப்புக்களின் நிலைப்பாடு என்பது சிறிலங்காவின் அரசின் பார்வையில் தீவிர நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்மக்களின் பார்வையில் தமிழர் தேசத்தின் நிலைப்பாடு.

சிறிலங்காவின் சட்டங்களுக்கு உட்பட்டதல்ல தமிழ்மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டம். கடந்த காலங்களில் சிறிலங்காவின் சட்டங்கள் தமிழ் மக்களை ஒடுக்கி இனப்படுகொலைக்கு உள்ளாகியமைதான் வரலாறு. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ, அல்லது அதன் சட்டங்களினலோ தமிழினப் படுகொலைக்கான நீதி கிடைக்காது என்றபடியினால்தான், சர்வதேச சட்டங்களையும், சர்வதேச நீதியினையும் தமிழ்மக்கள் கோருகின்றனர்.

ஆகையால் சிறிலங்காவின் சட்டங்களுக்கு பயந்து தமிழ்மக்களுடைய கோரிக்கைகளையோ, நிலைப்பாட்டையோ மழுங்கடிக்க முடியாது. சட்டங்களைக் கடந்து, தமிழர் தரப்புக்கள் அனைவரும் ஒற்றைக்குரலாக, சர்வதேசத்தை நோக்கி உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்லது இதுதான் தமிழர் தேசத்தின் இன்றைய வேணவா” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாரகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.