சஜித் அணியிலிருந்து விலகி தனியாகச் செயற்பட பொன்சேகா முடிவு – அறிவிப்பு விரைவில் வெளிவரும்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் அறிவிப்பொன்றை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விரைவில் வெளியிடுவார் என்று அறியமுடிகின்றது.

எதிர்வரும் வாரத்திற்குள் அவர் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பகமாக தெரிகிறது.

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் சரத் பொன்சேகா அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

எனினும், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முன்னதாக கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்து, அங்கத்துவத்தில் இருந்தும் விலகிக்கொள்ள சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.