கோப்பாய் காவல்துறையினருக்கு  எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

220 Views

சகோதரர்களான அக்கா தம்பியை  கட்டி வைத்து கடுமையான சித்தரவதை செய்ததாக கோப்பாய் காவல்துறையினருக்கு  எதிராக, பாதிக்கப் பட்டவர்களால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகநபரான புத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இருபாலை பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தலைமறைவாகி இருப்பதாக,  கோப்பாய்   காவல்துறையினர் கடந்த 21 ஆம் திகதி குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு அந்த நபர் இல்லை என்றதும் திரும்பி சென்றுவிட்டு அன்றைய தினம் இரவு 1 மணியளவில் மீண்டும் குறித்த வீட்டுக்குள் பொல்லுகளுடன் நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு சந்தேக நபரை உடனடியாக தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்ததுடன்,  சந்தேகநபரின் மச்சானான  வீட்டின் உரிமையாளரை கைது செய்து சென்ற காவல்துறையினர்  இரண்டு நாட்கள் காவல்துறை நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

அதே நேரம் கடந்த 23 ஆம் திகதி குறித்த சந்தேக நபர் இருக்கும் இடத்தை அறிந்த சந்தேகநபரின் குடும்பத்தினர் அவரை காவல்துறையில் ஒப்படைப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி அதிகாலை  கொண்டுவந்துள்ளனர். காவல்துறையினர் அவரை செம்மணிப்பகுதிக்கு அழைத்துவருமாறு கூறி அங்கு  கட்டி வைத்து கடுமையாக தாக்கிவிட்டு கைது செய்து காவல்துறையினர் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

பின்னர் மீண்டும் குறித்த சந்தேகநபரின் சகேதரியின் இருபாலை வீட்டுக்கு  வந்த காவல்துறையினர் சகோதரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து 23 ஆம் திகதி காலை 9 மணியளவில் கைதுசெய்துள்ளனர். அவரை இரு நாட்கள் காவல்துறை  நிலையத்தில் வைத்து மிளகாய் தூளை கண்ணில் தூவி பெண்  காவல்துறையினர் இரு கைகளிலும் பிடித்து வைத்திருக்க ஆண் காவல்துறையினர் தடிகளால் மிக கடுமையாக தாக்கியுள்ளனர்.

பெண் என்றும் பார்க்காமல் அந்தரங்க உறுப்புகளில் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் கைகளை கட்டிவைத்துவிட்டு தாக்கியுள்ளனர். மன உழைச்சலுக்குள்ளான அந்த பெண் காவல்துறை நிலையத்திலேயே தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்க்க முயற்சிசெய்த போது காவல்துறையினர் அதை தடுத்துள்ளனர்.

அதே நேரம் 24 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து  உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த பெண்ணை  விடுதலை செய்த காவல்துறையினர் சந்தேக நபரை 25 ஆம் திகதி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான குடும்பப்பெண் உட்காயங்களுக்குள்ளானதால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு 27 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் குறித்த விடயம் தொடர்பில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற காவல்துறையினர் தாம் அடித்ததை கூற வேண்டாம் எனவும் கிணற்றடியில் விழுந்ததாக கூறுமாறு  அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளதாக உறவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை சந்தேகநபரையும் அடிகாயங்களுக்குள்ளன நிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தினர்  27 ஆம் திகதி யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply