கோத்தபாயாவுக்கு எதிரான வழக்கை தள்ளி வைப்பேனே தவிர கைவிட மாட்டேன் – றோய் சமாதானம் நேர்காணல்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் றோய் சமாதானம் அவர்களும் ஒருவர். அவர் சிறீலங்கா அரசுக்கும் கேர்தபாய ராஜபக்சாவுக்கும் எதிராக 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வழக்கை தாக்கல் செய்து நடத்தி வருகின்றார்.

ஆனால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தற்போது அரச தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இலக்கு மின்னிதழ் மற்றும் இணையத்தளம் திரு சமாதானம் அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணலை மேற்கொண்டிருந்தது.

ஜெனீவா ஐ.நா.சபைவில் யில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்ற கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்.

 கேள்வி 1. சிறீலங்கா அரசு உங்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தொடுத்திருந்த வழக்கு தற்போது என்ன நிலையில் உள்ளது?

பதில்-ஐ.நா வில் 2013இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு ஒன்று சொல்லலாமே தவிர அதை செயற்படுத்த முடியாது. அவ்வழக்கில், எனக்கு சன்மானம் வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற பத்துக் கோரிக்கைகள் அந்த வழக்கில் இடம்பெற்றிருந்தது. எனக்கு சாதகமாக தீர்ப்பு 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆறு மாதத்திற்குள் சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. தீர்ப்பின் பின்னர் எதுவும் நடைபெறவில்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை ஐநாவிடம் இல்லை.அவர்கள் வழங்கிய தீர்ப்பு தீர்ப்புத் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

கேள்வி-நீங்கள் தொடுத்த வழக்கினால் சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவரின் வெளிநாட்டுப் பணயங்களுக்கு தடை ஏற்பட வாய்ப்புக்கள் உண்டா?

 

பதில்: பயணத் தடை என்னும்போது, எனது வழக்கு தொடர்புபட்ட ஒருவருக்கும் நுளைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதில் எந்த மாற்றமும் இல்லை. உதாரணமாக என்னுடையது அல்லாமல் வேறு ஒருவரை எடுத்துக் கொண்டால், நாமல் ராஜபக்ஸவை எடுத்துக் கொண்டால் அவருக்கு அமெரிக்காவோ, கனடாவோ, ஜேர்மனியோ, ஐக்கிய இராச்சியமோ விசா வழங்காது என எண்ணுகிறேன்.

சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லலாமே தவிர, வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது. அப்படி ஒரு பட்டியல் இருக்கின்றது. என்னுடைய வழக்கு தொடர்புபட்ட காவல்துறை அதிகாரிகள்  தொடக்கம் மேலும் பல அதிகாரிகளின் பெயர் விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த ஒரு தூதரகமும் கொழும்பில் நுளைவு அனுமதி வழங்காது. இது என்னுடைய வழக்கினால் நடந்த ஒரு முக்கியமான விடயம். எந்த ஒரு நாடும் அதாவது கனடா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உட்பட இடைத்தங்கல் விசா கூட குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வழங்காது.

கேள்வி மானிடத்துக்கெதிராக குற்றச்சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இன்று சனாதிபதியாகி விட்டார். இந்தக் கால மாற்றத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்? இனி நீங்கள் தாக்கல் செய்த வழக்குற்கு என்ன நடக்கும்?

 பதில்: இந்த வழக்கின் விபரத்தைச் கூறுகிறேன். லசந்த விக்கிரமதுங்கவின் மகள் மேற்கொண்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. என்னுடைய வழக்கு தள்ளுபடியாகவில்லை. என்னுடைய வழக்கிற்கு தற்காலிக ஒத்திவைப்பு முறை உள்ளது. ஆனால் நான் தற்காலிக ஒத்திவைப்பு மேற்கொண்டாலும்கூட கோத்தபயா ராஜபக்ஸவின் வழக்கறிஞர்கள் விதிவிலக்கு (Immunity) பெற முடியும்.  இது உலகத் தலைவர்களை பாதுகாக்கும் அடிப்படை விதி. அப்படி இருக்கும் போது, தற்காலிக ஒத்திவைப்பு முறைக்கு எதிராக அவர்கள் வழக்கு பதிவுசெய்யக்கூடும். அப்படி நடந்தால் எனது வழக்கும் தள்ளுபடியாகும். ஒரு வழக்கு அமெரிக்காவில் தள்ளுபடியாகினால், நான் எப்போதும் எக்காரணம் கொண்டும் அவருக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பதிவுசெய்ய முடியாது. எனவே நாங்கள் அவருக்கெதிரான வழக்கை இனிமேல்தான் பதிவுசெய்யப்போவதாக, தெரிவிக்க இருக்கின்றோம். ஏனெனில், லசந்த விக்கிரமதுங்கவின் மகளின் வழக்கு தள்ளுபடியாகி விட்டது. அவர் இனி  மேல்முறையீட்டு நீதிமன்றிற்கு போனால்கூட ஒன்றும் செய்ய முடியாது. கீழ் நீதிமன்றில் அளித்த தீர்ப்பே அங்கும் வழங்கப்படும். அவர் இனி அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

எங்கள் வழக்கும், ஜனாதிபதிக்கு எதிராக இருப்பதால், நீதிபதி அதனை தள்ளுபடி செய்யும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இன்னும் அது இடம்பெறவில்லை. டிசம்பர் 15, 16 திகதியளவில் இந்த வழக்கை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க  உள்ளதாக எங்கள் சட்டத்தரணி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளனர். நீதிபதி எங்களை வழக்கை நிறுத்தும்படி கூறவில்லை. ஆனால் நாங்கள் தற்காலிகமாக நிறுத்துகின்றோம். அப்படி அறிவிக்காது போனால் எமது வழக்கு தள்ளுபடி செய்யும் பட்சத்தில் நாம் அவருக்கு எதிராக அமெரிக்காவில் எந்த ஒரு சிவில் வழக்கையும் போட முடியாது.

 கேள்வி – கோத்தபாய ராஜபக்சா தனது அமெரிக்க குடியுரிமையை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் அமெரிக்க குடியுரிமையை இழந்தாலும் அவருக்கு எதிராக நீங்கள் இந்த வழக்கை நடத்த முடியுமா அல்லது நீதியை பெறமுடியுமா?

பதில்: குடியுரிமை தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரின் மனைவி, மகன் எல்லோரும் அமெரிக்கப் பிரஜைகள் தான். அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின் எப்போது அவர் அமெரிக்கா வருகின்றாரோ அப்போது வழக்கை பதிவுசெய்யலாம். வழக்குத் தொடரப்பட்டால் அதன் பின் எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் அதற்கான ஒழுங்குகளை செய்து வைத்துள்ளோம். பிரச்சினை என்னவெனில், அவர் ஜனாதிபதியாக இருக்கின்றார் என்பதால், சர்வதேச சட்டத்தின்படி அவருக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. ஐந்து வருடங்களோ, பத்து வருடங்களோ எவ்வளவு காலம் ஜனாதிபதியாக இருக்கின்றாரோ, நான் அவருக்கெதிராக ஒன்றும் செய்ய முடியாது. அவர் எப்போது பதவியில் இருந்து விலகி பொதுமகனாக வருகின்றாரோ அப்போது தான் நான் இந்த வழக்கைத் தொடரலாம். இதுதான் யதார்த்தம்.

அதேநேரம் எனது மனைவியின் தாயும், தகப்பனாரும் 16ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் இப்போது நாட்டில் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதனால் சட்டத்தரணியின் அறிவுறுத்தலுக்கு அமைய நான் அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றி விட்டேன். அதேநேரம் எனது மனைவியின் சகோதரர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது.  உங்களுக்கே தெரியும் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நிசாந்த என்ற காவல்த்துறை அதிகாரியே வெளியேறி விட்டார். அவருக்கே இந்த நிலைமை என்றால் எனக்கு அதிக நேரம் எடுக்காது.

தொடரும்……