கோத்தபயா ராஜபக்ஸ களமிறங்க வேண்டும் அஜித் பெரேரா

396 Views

கோத்தபயா ராஜபக்ஸ இலகுவில் தோற்கடிக்கப்படக்கூடிய வேட்பாளராக உள்ளமையால், அவர் களமிறங்க வேண்டும் என்றே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸதான் தோற்கடிக்க இலகுவான ஒரு வேட்பாளர்.

உண்மையில் அவர் களமிறங்கியதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எனவே, சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபயா ராஜபக்ஸதான் களமிறங்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.

அவருக்கு நாட்டின் 50 சதவீதமான மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள ஒருபோதும் முடியாது“ என மேலும் தெரிவித்தார். இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஹர்ஷன ராஜகருணா, “இந்த தேர்தலில் நாம் விசேடமான கொள்கைப் பிரகடனமொன்றை தயார் செய்யவுள்ளோம்.

இளைஞர்களுக்கு நன்மையளிக்கும் வகையில், எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இதுவரை செய்யாத பல்வேறு விடயங்களையே நாம் இதில் உள்ளடக்கவுள்ளோம். நாம் இளைஞர்களுடன்தான் இம்முறை ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளவுள்ளோம். எமது வேட்பாளரிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம். அவரை விமர்சிக்கலாம். இவ்வாறான ஒருவரைத்தான் நாம் ஜனாதிபதியாக்கவுள்ளோம்.

இதனைவிட சிறப்பு தகுதி வேறெதுவும் இல்லை. இவர் இளைஞர் தலைமுறையினருக்கு சிறந்த தலைமைத்துவத்தை நிச்சயமாக வழங்குவார்.” என மேலும் தெரிவித்தார்.

 

 

Leave a Reply