நேற்றைய தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றதற்கு இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இதன்படி பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கோத்தபயா ராஜபக்ஸ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்புக் கருதி, எது நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது. மீண்டும் ஒருமுறை பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. முன்வரவேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மதிமுக தலைவர் வை.கோ. தெரிவிக்கையில், கோத்தபயாவிற்கு வாக்களிக்காத தமிழ் மக்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான நாள் என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“இலட்சக் கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தார்களே அதற்கு நீதி கிடைக்கவில்லை. காணாமல் போன இலட்சக் கணக்கான தமிழர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. எனவே இந்த நாள் தமிழினத்திற்கு துயரமான நாள். எதிர்காலத்தில் இந்திய அரசு தமிழர்களை பாதுகாப்பிற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் சீனத்தோடும், பாகிஸ்தானோடும் உறவாடிக் கொண்டே, இந்தியாவை ஏமாற்றிக் கொண்டே, தமிழர்களின் அழிவிற்கும், தமிழர்களின் இன அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையும் செய்வதற்கு கோத்தபயா ராஜபக்ஸ துடித்துக் கொண்டே தான் இருப்பார்.
அதைத் தடுக்க வேண்டிய கடமை உலகத் தமிழ் இனத்திற்கு உண்டு. தாய் தமிழகத்திலே இருக்கின்ற தமிழர்களுக்கு உண்டு. தமிழக இளைஞர்களுக்கு உண்டு. நீதி ஒருநாள் கிடைக்கும், உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்து தான் தீர வேண்டும். இசைப்பிரியா படுகொலை, சனல் 4 இன் சாட்சியங்கள் இவையெல்லாம் மறைக்க முடியாதவை. இந்த சாட்சியங்கள் நம்முடைய நியாயத்தை சர்வதேச சமுதாயத்தின் மனச்சாட்சியிடம் எடுத்து வைக்கும். அதற்குரிய சூழல் உருவாகும் என நம்புகிறேன்” என்றார்.