மலையகம்: கேள்விக்குறியாகும் தொழிற்சங்க பலம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பெருந்தோட்டப் புறங்களில் தொழிற்சங்க கலாசாரம் வலுவிழந்து வருகின்றது.இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும், தொழிலாளர்கள் நசுக்கப்படும் அபாயநிலை மேலெழுந்து வருகின்றது.இதனை கருத்தில் கொண்டு தொழிற்சங்க கலாசாரத்தின் இருப்பினைப் பேணி அதனூடாக பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.இது குறித்து அனைவரும் விழிப்புடன் செயற்படுதல் வேண்டும். 

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் காவலனாக விளங்குகின்றன.தொழிலாளர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து  அவர்களின் எழுச்சிக்கு வழிகாட்டுகின்றன. உலகில் தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கக் காரணம் தொழிலாளர்களது பாதுகாப்பு, உரிமைகள் என்பவற்றைப் பேணி அவர்களை சுதந்திரமானவர்களாக வாழவைப்பதற்காகும். இந்த வகையில் தொழிலாளர் ஒருவர் தான் சார்ந்துள்ள தொழிற்சங்கத்தினதும் தனது நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தினதும் வரலாற்றைப் பற்றித் தெரியாமலும் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதின் முக்கியத்துவத்தை உணராமலும், தொழிற்சங்கமொன்றில் தனது உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளாமலும் இருக்கும் வரையில் ஒரு தொழிற்சங்கத்தினால் அவருக்கு எந்தவித பயன்களோ அல்லது அவரால் தொழிற்சங்கத்துக்கு எந்தவித நன்மைகளோ ஏற்படப்போவதில்லை.மாறாக இவர் தொழிற்சங்கத்தில் வெறுமனே அர்த்தமற்ற ஒரு அங்கத்தவராக இருக்கவேண்டிய நிலையே ஏற்படும் என்பது மூத்த தொழிற்சங்கவாதிகளின் கருத்தாகவுள்ளது.

எனவே ஏதேனும் ஒரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒருவர் மேற்படி விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.இந்த வகையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றன.கல்வி அபிவிருத்தி,கலை கலாசார விளையாட்டு அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி திட்டம், தொழில் உறவுகளைப் பேணுதல், பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல விடயங்களிலும் தொழிற்சங்கங்களின் வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்பு என்பன மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றது.கல்வி அபிவிருத்தி எனும்போது தொழிற்சங்கக் கல்வி மற்றும் பொதுக்கல்வி அபிவிருத்தி இரண்டிலும் தொழிற்சங்கங்களின் வகிபாகம் அளப்பரியதாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் தொழில் புரியும் சந்தர்ப்பங்களில் நிர்வாகத்தின் பல்வேறு கெடுபிடிகளுக்கும், தொழில் ரீதியான உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி வருவதனை நாம் காண்கிறோம்.இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்து இரு தரப்பினரிடையேயும் சுமுகமான உறவினை கட்டியெழுப்புவதற்கு தொழிற்சங்கங்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.சுமுகமான பேச்சு வார்த்தைகள், சட்ட ரீதியான முயற்சிகள், வேலை நிறுத்தப் போராட்டங்கள், மெதுவாக பணிபுரிதல் போன்ற பல முன்னெடுப்புக்களின் ஊடாக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட முயற்சி செய்கின்றன.இதேவேளை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல் ரீதியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள், தீர்மானங்கள்  என்பவற்றை ஆக்குதல், நடைமுறைப்படுத்துதல் என்பவற்றுக்கும் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த வகையில் மலையக மக்களிடையே தொழிற்சங்க கலாசாரம் என்பது அவ்வளவு இலகுவாக வேரூன்றி விடவில்லை.பல்வேறு சிக்கல்கள், முட்டுக்கட்டைகள் என்பவற்றுக்குப் பின்னரே தோட்டங்களில் தொழிற்சங்க கலாசாரம் வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.ஆரம்பத்தில் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் உள்நுழைந்து விடக்கூடாது என்பதில் நிர்வாகங்கள் மிகவும் கவனமாக இருந்தன.தோட்டங்களில் தொழிற்சங்க கலாசாரம் உள்நுழைந்துவிட்டால் அது தமது நிர்வாக ரீதியான செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும், தொழிலாளர்களிடம்  வேலை வாங்குவது சிரமமாகிவிடும், தொழிலாளர்கள் தமது  உரிமைகள் குறித்து அதிகமாக பேசத் தொடங்கிவிடுவார்கள்.அது தமக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும் என்று  நிர்வாகங்கள் எண்ணம் கொண்டிருந்தன.இதனால் தொழிற்சங்கங்களை அவர்கள் வெறுத்தனர்.நகர்ப்புறங்களில் இடம்பெறும் தொழிற்சங்க நிகழ்வுகளில் கூட தொழிலாளர்களை பங்கு கொள்ளவிடாது தடுத்து நிறுத்துவதிலும் நிர்வாகங்கள் சளைத்துவிடவில்லை.பல்வேறு  இழுபறி களுக்கும் மத்தியில் தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்நுழைந்த நிலையில் அவை தொழிலாளர்களுக்கு வழங்கிய சேவைகளை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை

 $.   நவீனத்துவம் இல்லாமை

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன.பாமர மக்களுக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்குவதில் தொழிற்சங்கங்கள் முன்னின்றன.இதனால் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிணைப்பு மென்மேலும் அதிகரித்தது.குறிப்பாக ஏனைய தொழிற்றுறையினரைக் காட்டிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவு என்பது ஒருபடி அதிகமாகவே இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.இவ்வாறாக தொழிலாளர்களின் காவலனாக விளங்கிய தொழிற்சங்கங்கள் இன்று படிப்படியாக செல்வாக்கிழந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.தொழிற்சங்கங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள், தூரநோக்கின்மை, தொழிற்சங்க நடவடிக்கைகள் பாரம்பரிய நடைமுறையில் இருந்து வரும் நிலையில் நவீனத்துவம் உட்புகுத்தப்படாமை         எனப்பலவும் சமகாலத்தில் தொழிற்சங்கத்தின் இருப்புக்கு சவாலாக இருந்து வருகின்றன.இவற்றோடு சமகாலத்தில் பொருளாதார நெருக்கீடு அதிகரித்துள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.எனினும் தொழிற்சங்க பணியாளர்களுக்கு குறைவான ஊதியமே மாதாந்தம்   தொழிற்சங்கங்களினால் வழங்கப்படுவதாக தொழிற்சங்கப் பணியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இவ்ஊதியப் பற்றாக்குறை நிலையானது அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் இடர்பாடுகளை தோற்றுவித்துள்ளது.எனவே அவர்களில் பலர் மாற்றுத் தொழில்களை நாடிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.இத்தகைய நிலைமைகளும் தொழிற்சங்க கலாசாரத்தின் வீழ்ச்சிக்கு ஏதுவாகின்றன என்பதையும் கூறியாக வேண்டும்.

அத்துடன் தொழிற்சங்கங்கள் தமது இலக்கிலிருந்தும் மாறுபட்டு சுயநலவாத சிந்தனைகளை மையப்படுத்தி செயற்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.தொழிற்சங்கவாதிகள் தொழிற்சங்கத்தை மையப்படுத்தி அரசியல் களம் புகுவதற்கு முயற்சிக்கின்றார்களே தவிர தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை.இத்தகைய அதிருப்திகளால் தொழிற்சங்க கலாசாரத்தின் வலுவிழந்த போக்கினை இப்போது அவதானிக்க முடிகின்றது.இலங்கையின் பெருந்தோட்டங்களை  நிர்வகிக்கும் கம்பனியினர் அதிகரித்த அல்லது உழைப்பிற்கேற்ற சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு  வழங்கமுடியாத நிலையில் தாம் சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.உற்பத்திச்செலவு அதிகமென்றும் அவர்கள் காரணம் காட்டுகின்றனர்.இந்நிலையில் வெளியார் உற்பத்தி முறைக்கு அவர்கள் அதிகமாகவே அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.எதிர்காலத்தில் இது சாத்தியப்படுமிடத்து தொழிற்சங்கங்கள் மேலும் வலுவிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.தமது தொழிற்சங்கத்துக்கு அங்கத்தினர்களை இணைத்துக் கொள்ளும் போதும், தேர்தல் காலங்களிலும் தொழிலாளர்களை அரவணைக்கும் தொழிற்சங்கங்கள் பின்னர் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

தொழிற்சங்க கலாசாரம் வலுவிழக்கும் அல்லது தொழிற்சங்கங்களின் இருப்பு கேள்விக்குறியாகுமிடத்து தொழிலாளர்கள் இதனால் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்குவார்கள்.தொழிற்சங்கங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் நிலை மழுங்கடிக்கப்படுவதால் நிர்வாகத்தினரின் கை ஓங்கிவிடும். இது தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடுகள் மேலோங்குவதற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.தொழிற்சங்க ஐக்கியமானது பேரம் பேசும் சக்திக்கு அடித்தளமிடுகின்றது.கடந்த காலங்களில் பேரம்பேசும் சக்தியின் ஊடாக தொழிலாளர்கள் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையும் தெரிந்த விடயமாகும்.இந்நிலையில் தொழிற்சங்கங்கள் தடமிழக்கும் அல்லது வலுவிழக்கும் நிலையில் அது தொழிலாளர்களுக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்தாது.எனவே இதனை கருத்தில் கொண்டு மலையகத்தில் தொழிற்சங்க கலாசாரத்தை வலுப்படுத்த அனைவரும் உறுதி பூணவேண்டும்.மேலும் தொழிற்சங்கங்கள் தமக்கிடையே நிலவும் முரண்பாடுகளை வேரறுத்து ஓரணியில் நின்று தொழிலாளர்களின் நலன்களுக்காக குரல் கொடுக்க முற்பட வேண்டும்.பொதுவான விடயங்களிலாவது இது சாத்தியப்பட வேண்டும்.