குறுகிய நேரத்துக்கு சபை அமர்வு – நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று விவாதம்

கொரோனா தொற்று காரணமாக இவ்வார நாடாளுமன்ற அமர்வை இன்று மாத்திரம் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக இவ்வார நாடாளுமன்ற அமர்வை நடத்துவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிமுதல் மாலை 4.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படும் என செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

இன்று காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நிதி முகாமைத்துவப் பொறுப்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டளை) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மேலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது, மதிய போசனத்துக்காக சபை நடவடிக்கைகளை இடைநிறுத்தாது தொடர்ந்தும் விவாதத்தை முன்னெடுத்துச்செல்ல தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply