கி.மு 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மதுரையில் கண்டுபிடிப்பு

மதுரை – தேனி சாலையில் கிண்ணிமங்களம் கிராமத்தில் உள்ள ஏகநாதர் பள்ளிப்படை கோவிலுக்கு அருகில் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்நததெனக் கருதப்படும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புதிய கட்டடம் கட்டுவதற்காக கோயில் அருகே நிலத்தைத் தோண்டிய போது பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்து வந்த கல்வெட்டு ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் அங்குள்ள தூண்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருப்பதை இரு நாட்களுக்கு முன்னர் கண்டு பிடித்தனர். இது குறித்து காந்திராஜன் கருத்துத் தெரிவிக்கையில்,

அந்தக் கல்தூணில் “ஏகன் ஆதன் கோட்டம்” என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றோம். பொதுவாக பாண்டிய நாட்டில் உள்ள குன்றுகளில் பல தமிழி கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், தூண் ஒன்றில் தமிழி எழுத்துக்கள் தமிழ் நாட்டில் முதன்முதலாக இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு அடி உயரமுள்ள மற்றொரு சதுரக்கல்லில் “இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்“ என்று வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இது 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

Mathurai theeni2 கி.மு 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மதுரையில் கண்டுபிடிப்புஇதேவேளை, மதுரை கீழடியிலும், அதை அண்டியுள்ள அகரம் கிராமத்திலும் தொடர்ச்சியாக தொல்பொருள் கிடைத்து வரும் நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இந்த ஆய்வு பற்றி பல தொல்லியல் நிபுணர்கள் தங்கள் முகநூல்களில் பகிர்ந்து வருகின்றார்கள்.