கிழக்குமாகாணத்தில் ஆளுனராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் – துரைரெட்னம்

தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி இலங்கைக்கும் முழுவதுமான ஜனாதிபதி அவர் சிறுபான்மை மக்களுடனான இணக்கப்பாட்டு அரசியலை முன்வைக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதற்காக முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.வடகிழக்கினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை மறந்துவிடவில்லை.

தமிழ் மக்களின் உரிமை தொடர்பான கோரிக்கைக்கு எந்தவித தீர்வும்
முன்வைக்கவில்லை. வடகிழக்கு மக்களின் வாக்குகள் தேவையில்லையென்று கூறியமை, தென்னிலங்கை பகுதியில் பௌத்தம் விதைக்கப்பட்டுள்ளது. இக்காரணங்களை முன்வைத்து கோத்தபாய ராஜபக்ஸவினை நிராகரித்தது உண்மையே. இதுவொரு வரலாற்று ரீதியான
வாக்களிப்பு.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் கடந்த கால போராட்டத்தின் வலியை உணர்ந்து தென்னிலங்கையின் முன்வைக்கப்பட்ட பௌத்த சிங்கள இனவாதத்திற்கு எதிராக தங்களது உரிமைகளையும் தேவைகளையும் நிலைநாட்டுவதற்காக வாக்களித்திருக்கின்றார்கள். இதன்மூலம்
தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தங்களது செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதன்மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் மூன்று இனங்களுக்குமான ஜனாதிபதி, நான்கு மதத்திற்குமான ஜனாதிபதி,முழு இலங்கைக்குமான ஜனாதிபதி என்பதை அவர் ஏற்றுக்கொள்வராக இருந்தால் எதிர்காலத்தில் வடகிழக்கில் உள்ள
சிறுபான்மையினம் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக தனது இணக்கப்பாடான அரசியலை முன்வைக்கவேண்டும்.

வடகிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்த இணக்கப்பாடு அரசியலை எந்தவித இனவாதுமும் இல்லாமல் மூன்று இனங்களும் ஐக்கியமாக வாழ்வதற்காகவே தங்களை அர்ப்பணிப்பு செய்துள்ளனர்.அந்த அடிப்படையில் பிற இன ஐக்கியத்தினை பேணிக்காக தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.இதற்கான செயற்பாடுகளுக்கு முன்னெடுப்புகளை ஜனாதிபதி முன்னெடுக்கவேண்டும்.இதனை தமிழ் மக்கள்
எதிர்பார்க்கின்றார்கள்.

கடந்த 40வருடத்திற்கு மேலாக வடகிழக்கில் நடைபெற்ற ஆயுதரீதியான போராட்டம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக நடாத்தப்பட்ட போராட்டம்.அந்த போராட்டத்தில் வடகிழக்கில் அதிகளவான அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.பெருமளவான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் தேசியத்திற்கான விடுதலை தோற்கடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான பார்வை மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

ஓட்;டுமொத்த வலியினால் தமிழ் மக்களினால் அளிக்கப்பட்ட தீர்ப்பினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் தனது நல்லிணக்கத்தினை வெளிக்காட்டவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஆளுனராக தமிழர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும்.ஜனாதிபதி இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக சிறுபான்மையினருக்கு தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து அவர்களையும் இணைப்பாளர்களாக இணைத்துக்கொண்டு அவர்களுக்கும் அதிகார அரசியலை பரவலாக்கம் செய்யக்கூடிய நடவடிக்ககைளை முன்னெடுக்கவேண்டும்.அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் நல்லிணக்கத்தினை வெற்றிபெறமுடியும்.

அதுயில்லாத நிலையேற்பட்டால் மீண்டும் மீண்டும் இனக்குரோதங்கள் முரண்பாடுகள் அதிகரித்துச்செல்ல செல்ல இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழமுடியாத நிலையேற்படும்.

இந்த நாட்டில் இன ஐக்கியத்தினையும் இன ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.