கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப் பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் 01ஆம் ஆண்டு கற்றுவரும் தலவாக்கலை,லிந்துலை பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவன் நேற்று முன்தினம் முதல் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் நேற்று முன்தினம் மாலை வரையில் விடுதிக்கு திரும்பாத நிலையில் நேற்று மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமையினால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டனர்.

குறித்த மாணவன் காணாமல்போனது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் மாணவனை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Leave a Reply