கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை

இருப்பதைக் காப்பதற்கும் – இழந்தவற்றைப் பெறுவதற்கும் இறையருளுண்டென நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படவைக்கும் ‘கிறிஸ்துவின் பிறப்பு’ முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை.

• மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக் கொண்டாட்டங்களுக்கான சந்தை விழாவாகலாமா?

• விடுதலையைச் சிந்திக்க நேசிக்கப் பழக்க வந்த விழா – மக்களின் பொருள்வளத்தையும் மதியாற்றலையும் பறிக்கும் விழாவாகலாமா?

முன்னுரை

கிறிஸ்மஸ் என்பதன் பொருள் கிறிஸ்துவுக்கான பூசை என்பது. அதாவது கிறிஸ்து பிறந்து 366 ஆண்டுகளின் பின் டிசம்பர் 25 ஐ கிறிஸ்து பிறந்த நாள் என உரோம மன்னன் கொன்சன்டைன் அறிவித்து ஆட்சியாளர்க்கு அனுசரணை செய்யும் மதமாக மதமெதையும் நிறுவாத கிறஸ்துவின் சிந்தனைகளை மாற்றிய பொழுது தோற்றம் பெற்றதே கிறிஸ்மஸ் விழா.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தின் படி மார்ச் 25 இலேயே கிறிஸ்து பிறந்தார் என்பதாக உள்ளது. அத்துடன் கீழைத்தேய ஞானிகள் அவரை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரை வந்து வணங்கும் வரை கிறிஸ்து பிறந்தார் என்பதே உலகுக்குத் தெரியாது ஏழைகளில் ஏழையரான இடையர்களுக்கே தெரிந்த ஒரு பிறப்பாக இருந்தது. அவர் பிறந்தமையை தெரிய வந்தவுடனேயே இனஅழிப்பை எதிர்நோக்கி பிறந்த மண்ணான பெத்லேகமில் இருந்து தப்பிச் சென்று அகதியாக நசரேத்தில் புலம்பெயர் வாழ்வைப் பெற்று “நசரேத்தூர் இயேசு” என அழைக்கப்பட்டார் என்பது வரலாறு.

IMG 0561 கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலைஆனால் மேற்குலக காலனித்துவ மதமாக கிறிஸ்தவம் உலகெங்கும் பரப்பப்பட்ட பொழுதும் பின்னர் அமெரிக்க கலாச்சாரம் உருவாக்கிய சந்தோக்குளோஸ் என்னும் கிறிஸ்மஸ் தாத்தா வர்த்தக மரபு யேர்மனில் ஏழையருக்குப் பரிசுப் பொருள் அளிக்கவென நிறுவப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தைக் கூட சந்தைக் கவர்ச்சிக்கும் சந்தை ஊக்குவிப்புக்குமான அடையாளமாக்கி கிறிஸ்மஸ் சீசன் என ஒன்றையே உருவாக்கி அன்று முதல் இன்று வரை உண்டாட்டுக் கொண்டாட்ட காலமாக இக்காலத்தை மாற்றி விட்ட நிலையில் கிறிஸ்மஸ் என்பதன் பொருளே மறக்கப்பட்டுள்ளமையை அனைவரும் அறிவர். மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக் கொண்டாட்டங்களுக்கான சந்தை விழாவாகலாமா?விடுதலையைச் சிந்திக்க நேசிக்கப் பழக்க வந்த விழா – மக்களின் பொருள்வளத்தையும் மதியாற்றலையும் பறிக்கும் விழாவாகலாமா? என்கிற கேள்வியே கிறிஸ்மஸ் குறித்த சிறிய தேடல் ஒன்றை இக்கட்டுரையாக முன்வைக்கச் செய்கிறது.

‘இன்று இருப்பதைக் காத்தல் – இழந்ததை மீட்டல்’ என்பது முடியாட்சிக்கு நிகரான சனநாயக ஆட்சி ஒன்றின் பௌத்த சிங்கள மேலாண்மைக்குள் சிக்குண்ட ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பது உலகறிந்த உண்மை. இதைப்போலவே ‘இருப்பதைக் காத்தல் – இழந்ததை மீட்டல்’, என்பது உரோமர்களின் முடியாட்சிக்கு உட்பட்டிருந்த யூதர்களின் வரலாற்றுத் தேவையாக இருந்த சூழலிலேயே இயேசு மீட்பு தரும் இறைமகனாகப் பெத்லேகமில் பிறந்தார் என்பது, அவரது வாழ்வையும் போதனைகளையும் எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின், அதாவது அவர் வாழ்ந்து முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுதிய அருளாளர்கள், மத்தேயுவும், லூக்காவும் தரும் செய்தி. ‘இயேசு’ என்று பிறக்கும் குழந்தைக்குப் பெயரிடுமாறு – வானதூதர்களால் முன்மொழியப்பட்ட பெயராக – மத்தேயு லூக்கா இருவருமே குறிக்கப்பட்டதாலேயே “இயேசு” அவரின் பெயராக பெருவழக்காகியது.

இந்தப் பெயர் ‘இயேசு’பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுக்கு முன்னரே இஸ்ரேல் மக்களை எகிப்து நாட்டின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்க முயற்சிகள் எடுத்த மோசேயால் பழைய ஏற்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பெயராக உள்ளது. பெயரிலேயே இயேசுவின் வாழ்வும் வரலாறும் இஸ்ரேலிய மக்களின் விடுதலைக்கான ஒன்று என்பது எடுத்த எடுப்பிலேயே நற்செய்தியாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது.

‘இயேசு’ கடவுளே விடுதலை தருபவரென்னும் இஸ்ரேலிய புலம்பெயர்வுக்கால நம்பிக்கை மொழி காப்பவர் என்ற பொருள்படும் கிபூரூ மொழிச் சொல்லான ஓசேயா ர்ழளநயஇ கன்னியின் மகன் ஒருவரை யூதகுலத் தலைவராக மோசே நியமித்த பொழுது மோசேயால் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

( எப்ராயிம் குலத்தின் இருந்து நூனின் மகன் ஓசேயா. எண்ணிக்கை 13:8 ), பின்னர் மோசோயால் ஓசேயா கானான் நாட்டை உளவு பார்க்க அனுப்பப்பட்ட போது யோசுவா Jehoshua (எண்ணிக்கை 13:16) என அப்பெயர் மாற்றப்பட்டது. இதற்கு யாவே (என்றும் இருப்பவர்) தான் மீட்பு எனப் பொருள்.

இதற்குப் பின்னர் யாவே பபிலோனியாவுக்கு யூதர்கள் புலம்பெயர்ந்த வாழ்வினை மேற்கொண்ட காலகட்டத்தில் கிரேக்க மொழிச் சொல்லான Jesus என்னும் சொல்லாக ‘Jehoshua’ உள்வாங்கப்பட்டது. இதன் பொருளாக கடவுளே இரட்சணியம் என்னும் கருத்து அமைந்து போராடும் இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கை தரும் மொழியாக விளங்கியது.

இயேசு என்னும் இந்த வரலாற்றுப் பெயரை மரியாளுக்கும் யோசேப்புக்கும் வானதூதர் வெளிப்படுத்தியதன் மூலம் இயேசுவின் பிறப்பு என்பது “இருப்பதைக் காப்பதற்கும் – இழந்தவற்றை மீட்பதற்குமான” இஸ்ரேலிய மக்களின் விடுதலைக்கான தலைவனின் தோற்றம் என்பதை நற்செய்திகள் உறுதி செய்கின்றன.

அதிலும் குறிப்பாக நற்செய்தியாளர் லூக்கா இயேசு பிறப்பதற்கு முன்பு கி.மு 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த எசயா என்னும் இஸ்ரேலிய இறைவாக்கினர் மண்ணினதும் மக்களினதும் விடுதலை குறித்துப் பேசிய வார்த்தைகளையே அன்னை மரியாளின் “ வலியோரை அரிணiயில் நின்று தூக்கி எறிந்துள்ளார் – தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

புசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்” போன்ற பாடல்களாகவும் இயேசு பேசிய மொழிகளாகவும் மீளப் பதிந்து கிறிஸ்துவின் வரலாறு என்பது விடுதலைக்கான வரலாறு என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார்.

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது – ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் – ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் – ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் – அவர் என்னை அனுப்பினார்” என இயேசு தன்னுடைய பிறப்பின் நோக்கைத் தெளிவுபடுத்திய வார்த்தைகள் கி.மு. 800 இன் பிற்பகுதியில் எசயா எழுதிய இஸ்ரேலிய விடுதலைக்கான அதே வார்த்தைகளாக உள்ளது. ‘கிறிஸ்து’ அவன் என்றாலே விடுதலைக்காக அனுப்பப்பட்டவன்

ஆனால் நற்செய்தியில் ‘கிறிஸ்து’ என்னும் சொல்லே இயேசுவைக் குறிக்க 514 முறை பயன்படுத்தப்பட்ட சொல்லாக உள்ளது. கிறிஸ்து என்றால் கடவுளால் ‘அருள் பொழிவு பெற்றவர்’ என்று பொருள். இந்தக் கருத்தைக் கொண்டுள்ள ‘மெசியா’ என்கிற கிபூரூ சொல்லுக்கான கிரேக்க சொல்லே, ‘கிறிஸ்து’.

கிறிஸ்து என்னும் பெயரைப் பயன்படுத்தியதன் வழி இஸ்ரேலியர்களுக்கு அவர்களை விடுவிப்பதற்கு கடவுள் அவர்களுக்கு ஒரு மெசியாவை அனுப்புவேன் என அளித்த வாக்குறுதியின் நிறைவே கிறிஸ்துவின்பிறப்பு என்பதை ஆணித்தரமாக மத்தேயுவும் லூக்காவும் எடுத்து விளக்குகின்றனர். இதனாலேயே இயேசு என்னும் சொல்லுக்கான பொருளாக நிறைவேற்றுபவர் – காப்பவர்- மீட்பர் என்கிற பொருள்கள் சுட்டப்பட்டு வருகின்றன.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் நம்பிக்கையே விடுதலைக்கு உறுதி தந்தது விடுதலைத் தலைவனாக வந்து மனிதன் வழியாகச் செயல்படுபவர் கடவுளே என்பது இஸ்ரேலியரின் நீண்டகால நம்பிக்கை. எனவே தங்களுடைய விடுதலைத் தலைவனைக் காணும் பொழுதெல்லாம் கடவுள் நம்மோடு இருக்கிறார் என நம்பிக்கை பெற்றனர் இஸ்ரேலியர்கள்.

“இம்மனுவேல்’ என்னும் சொல்லின் பொருள் கடவுள் நம்மொடு இருக்கிறார் என்பதாகும். கிறிஸ்துவே அந்த “இம்மனுவேல்’ என்பது நற்செய்தியாளர் மத்தேயுவின் எடுத்துரைப்பாக அமைந்தது.

நிறைவுரை

கிறிஸ்து பிறப்பு என்பது இஸ்ரேலிய மக்களதும் மண்ணினதும் விடுதலைக்கான வரலாற்றுச் சக்தி ஒன்றின் பிறப்பு. இந்தப் பின்னணியில் உலகெங்கும் உள்ள மக்களுக்கு “ பசியாய் இருந்தேன் உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தணித்தீர்கள். அன்னியனாய் இருந்தேன் என்னை ஏற்றுக் கொண்டீர்கள். நான் ஆடையின்றி இருந்தேன் எனக்கு ஆடையணிவித்தீர்கள். நோயுற்றிருந்தேன் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்.

christmasworld ps 28 கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை
christmasworld 2019

சிறையில் இருந்தேன் என்னைத் தேடி வந்தீர்கள். மிகச்சிறியோராகிய என் இச் சகோதர சகோதரிகளில் ஒருவருக்கு நீங்கள் செய்த பொழுதெல்லாம். எனக்கே செய்தீர்கள்” என அறிவித்த பிறப்பு கிறிஸ்துவின் பிறப்பு. என்னுடையது எல்லாம் உன்னுடையது எனத் தன் உயிரைக் கூட மனித விடுதலைக்காய் தந்த மகத்தான பிறப்பு கிறிஸ்துவின் பிறப்பு. எனவே கிறிஸ்துவின் சிந்தனைகளைச் செயற்படுத்துவதற்கான விழாவாக கிறிஸ்மஸ் விழாவை நாம் மாற்றினால் எந்தச் சர்வதிகார சூழலிலும் கடவுள் நம்மொடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் “இருப்பதைக் காக்கவும் – இழந்ததை மீளப் பெறவும் முடியும்” என்பதே கிறிஸ்மசின் உண்மைச் செய்தியாக உள்ளது.

ஆய்வாளர் பற்றிமாகரன்.

Leave a Reply