காலி முகத்திடலில் இனிமேல் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம்

கொழும்பு – காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 220 மில்லியன் செலவில் காலி முகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து புனரமைப்புக்காக 6.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் அதிகளவில் கூடினால் காலி முகத்திடலின் அழகைப் பேண முடியாத நிலை ஏற்படும் என்பதால் 20ஆம் திகதி முதல் சமய நிகழ்வுகளுக்கு மாத்திரம் காலி முகத்திடலைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.