காலத்தின் பெருந்தலைவன் – கவிஞர் அமரர் மாரீசன்

அருளுடைய விழிகளொடு கனிவுதரு மொழிகளொடு

நெகிழ்கின்ற இதயத்தின் ஆழத்தின் கருணையொடு

பெருந்துயரம் களைகின்ற பேராண்மைத் திறத்தினொடு

பேரிடரு ளாழ்ந்துவிட்ட தமிழினத்தின் காவலனாய்

மருவிவரு மெதிரிபடை அதிரடியிற் சரிந்தழிய

மண்டியிட்டு உரிமை கேட்ட காலத்தையே மாற்றிவிட்டு

குருதியிடை நடைபயின்று ஆயுதங்கள் பறித்தெடுத்து

உலகினையே மயக்கிநிற்கும் காலத்தின் பெருந்தலைவன்

praba2 காலத்தின் பெருந்தலைவன் - கவிஞர் அமரர் மாரீசன்
National Leader Hon. V.Pirabaharan

பெற்றவரை வளர்த்தவரைக் கைநெகிழ்ந்த குழந்தைகளின்

அன்னையாகி அரவணைத்து முத்தமிட்டு மகிழவைத்து

நற்றவத்தின் முத்துக்களாய் உதித்துவிட்ட மழலைகளை

வளர்த்தெடுக்கும் பெரும்பணியைச் செயலாக்கும் மதிவளத்தான்

விற்பன்னராய்த் தொழில்நுட்பக் கலைஞர்களாய் மண்காக்கும்

சாதனைகள் படைக்கின்ற சந்ததியை வளர்த்தெடுக்கும்

அற்புதங்கள்  படைத்துயர்ந்து அவனியையே திகைக்க வைக்கும்

சற்குணனாம் பிரபாவெம் காலத்தின் பெருந்தலைவன்

 

பள்ளிசெல்லும் பிள்ளைகளின் கல்வியிலே கண்ணுறுத்தி

பகலிரவாய்ப் பாடநெறி கற்பதற்கு வசதிசெய்து

துள்ளியெழும் துடிப்புடனே தடைகள் தாண்டி விரைந்து கற்கும்

நுட்பமுள்ள பிள்ளைகளின் திறமைக்குப் பரிசளித்து

வள்ளலெனச் சிறந்துநின்று பாரிஎன்னும் நாமம் சூடி

களத்தினிடை தளபதியாய் மக்களிடை அன்னையுமாய்

உள்ளமெல்லாம் ஒளியேற்றும் ஆசானாய் எழுந்துநின்று

உலகினையே மயக்குகின்ற காலத்தின் பெருந்தலைவன்