”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி

623 Views

“உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்”

ஈழத்தில் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் துயிலும் இல்லங்கள் தோறும் கல்லறைகளுக்கும், நடுகற்களுக்கும் முன்னால் கண்ணீர்மல்க நின்று இவ்வாறு சத்தியம் செய்தவர்கள் நாங்கள்.

ஆம்! தாயக விடுதலை என்ற கனவைத் தம் நெஞ்சங்களில் நினைத்து, சாவைத் தம் தோள்களின் மீதே சுமந்து நடந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு – மாவீரர்களுக்கு – உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் செய்து கொடுத்த சத்தியம் இது.

யாரந்த மாவீரர்கள்? ஏனிந்த சத்தியம்?

சோற்றைக் குழைத்து உருண்டையாக்கிக் கையில் வைத்து, “சாப்பிடு ராசா… பசியோடை வந்திருப்பாய்…” என்று பாசத்தோடு சொன்ன அம்மாவின் முகத்தைப் பார்க்காமல் குனிந்தபடியே இருந்த அவனுடைய கண்களை நீர் திரையிட்டது.

“அம்மா… உன்ரை கையாலை நான் சாப்பிடுற கடைசிச் சாப்பாடு இது”

தனது சாவுக்கு நாள் குறித்து விட்டவன், இன்னும் சில நாட்களில் காற்றோடு காற்றாய்க் கலந்துவிட இருந்தவன், போகுமுன் ஒரு தரம் பெற்றவளின் முகம் காணத் துடித்தவன்,

இதோ – மெலிந்த உடலும் குழிந்த கண்களுமாய் என்றாவது ஒருநாள் தன் ஒரேயொரு மகன் தன்னிடம் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு தன் தள்ளாத முதுமைப் பருவத்தைத் தனியே கழித்துக் கொண்டிருக்கும் அந்த ஏழைத் தாய்க்கு முன்னால் வாரத்தைகளேதும் அற்றவனாய் பரிதவிக்கும் உள்ளத்துடன் உட்கார்ந்திருக்கிறான். விடுதலையை நேசித்து, அதனால் மரணத்தை யாசித்தவன் அவன்.

விடை பெறும் நேரம்.. எதுவுமறியாத அன்னை, அன்போடு அவன் தோள் தடவி, “கவனமாய் போட்டு வா ராசா…” சொன்ன போது,

“நிச்சயம்  வருவனம்மா… விடுதலை பெற்ற எமது மண்ணில் வேற்றுருவில்.. வேற்றுயிரில்..” அவனது உள்மனம் சொல்லிக் கொண்டது.

இவன் எங்கள் தேசத்தின் ஒரு மாவீரன். கரும்புலி வீரன்.

களமாட இருந்த வீரர்களின் அணியில் அவளும் ஒருத்தி

இலக்குத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் களம் நோக்கிய நகர்வு தொடங்க இருந்தது. களமாட இருந்த வீரர்களின் அணியில் அவளும் ஒருத்தி. தாக்குதலின் முடிவு வெற்றியா, தோல்வியா என்பதற்கப்பால், வீரர்களின் களப்பலி தவிர்க்க முடியாத ஒன்று என்பது யதார்த்தம். அவள் வீட்டுக்குப் போய்க் குடும்பத்தினரைப் பார்த்து நீண்ட காலமாகி விட்டதால், புறப்படுமுன் ஒருதரம் வீட்டிற்குப் போய்வர நினைக்கிறாள்.

பேத்தியின் வரவால் மகிழ்ந்த பாட்டியின் பூரிப்பு,.. அக்காவைக் கண்ட தம்பி தங்கையரின் ஆனந்த ஆரவாரம்… பிள்ளைக்கு முருங்கை இலை பிடுங்கி வந்து வறை சமைத்த அம்மாவின் பாசம்… மகளைக் கண்ட மகிழ்ச்சியோடு கூடவே, வராதவள் திடீரென வந்திருப்பதில் தோன்றிய சந்தேகம் இழையோடிய அப்பாவின் பார்வை…

அவளுடைய வரவினால் ஒரு சில மணிப்பொழுதுக்குள் வீடு கலகலப்பாகியது. வந்தவள் ஒருநாள் கூடத் தங்காமல் திரும்புகிறாளே என்ற அனைவரினதும் ஆதங்கத்துடன் கூடிய விடை பெறுதலின் போது – விழியோரங்களில் திரண்டு வந்த நீர்த்துளிகளை எவரும் அறியாமல் துடைத்தெறிந்து, அவள் சிரித்தபடி கையசைத்து புறப்படுகிறாள்.

“மீண்டும் வருவேனோ மாட்டேனோ” என்று அவளது உள்மனம் நினைத்துக் கொண்டது.

சில நாட்கள் கழிய – அந்தத் தாக்குதல் வெற்றி பெறுகிறது. “தமிழீழம்  என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி பிறந்த நிலத்தின் வித்தாக வீழ்ந்த ஐந்து வீரர்களில் அவளும் ஒருத்தி.

இவள் எங்கள் தேசத்தின் ஒரு மாவீராங்கனை

இதுபோல ஒன்றல்ல.. இரண்டல்ல, எங்கள் தேசத்தின் பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள், விடுதலை வேண்டித் தம் உயிர்ப்பூவைக் கிள்ளி எறிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாவீரன்/ மாவீராங்கனையின் வாழ்க்கைப் பின்னணியிலும் ஆயிரமாயிரம் நெகிழ்ச்சியும் – உயிர் உருக்கும் – கதைகள் பொதிந்து கிடக்கின்றன.

வாழ்க்கை தரக்கூடிய எல்லா இன்பங்களையும் துச்சமென நினைத்துத் தூக்கியெறிந்து, தேச விடுதலை ஒன்றே ஒரு இனத்தின் அதி முக்கிய தேவை என்பதையும், அதுவே உயிரினும் மேலானது என்ற உண்மையையும் மனங்களில் இருத்தி – அதன் வழி நடந்து தம் உயிர்களை ஆகுதியாக்கியவர்கள் எங்கள் மாவீரர்கள்.

களமாடுதலில் என்றைக்காவது ஒருநாள் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும், தேசம் வாழ உயிர்விலை கொடுத்த உத்தமர்கள்..

இன்னும் மேலே போய் தங்கள் சாவுக்குத் தாங்களே நாள் குறித்து, உடலில் வெடி மருந்தேற்றி எதிரி நிலைகளில் வெடித்துச் சிதறிய கரும்புலிக் கண்மணிகள்…

விடுதலை பெறும்வரை முகவரி மறைக்கும் பெருவிதி சமைத்துப் பெயரின்றிப் போனவர்கள். இவர்கள் – தமிழனுடைய தனி அடையாளமாய்த் தமிழீழம் மலரும் என்ற பெரு நம்பிக்கையோடு உயிர் விலை கொடுத்துக் கண்மூடிக் கிடக்கிறார்கள்.

அந்தப் புனிதர்கள் பயணித்த தேச விடுதலை என்ற உன்னத வீதியில் எங்கள் அடிகளும் தொடர்கின்றனவா? உரிமை என்ற உயரிய தத்துவத்தை எங்கள் கைகள் இறுகப் பற்றியிருக்கின்றனவா? இது போன்ற ஐயப்பாடுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எங்களுடைய போராயுதங்கள் உறைநிலையடைந்து பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டன. எங்கள் உணர்வுகளும்கூட உறைநிலையடைந்து விட்டனவா? விடுதலை மீது மாவீரர்கள் கொண்டிருந்த நம்பிக்கை செயல் வடிவம் பெறுவதற்கான ஏதாவதொரு நடைமுறை சமிக்ஞை இதுவரை கிடைத்ததா எனில், அதுவும் கூட இல்லையென்றே சொல்ல வேண்டும். அவர்களிடம் நாம் செய்த சத்தியம் என்னவாயிற்று?

தமிழினம் சிந்திய குருதி முள்ளிவாய்க்காலில் உறைந்துபோய்க் கிடக்கிறது. இன்றும் தமிழின அழிப்பை நோக்கிய எதரியின் நகர்வு மேலும் பல மடங்காக முனைப்புப் பெற்றிருக்கிறது. இதற்குச் சில தமிழர்களும் துணை போகிறார்கள் என்பது எமக்கான வரலாற்றுத் துன்பம்.

நெஞ்சம் வலிக்கிறது. உயிர் துடிக்கிறது.

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை வருடா வருடம் மாவீரர் நாளன்று ஏதோ ஒரு இடத்தில் (அல்லது வேறு வேறு இடங்களில்…? ! ) கூடி, கண்ணீர்த் துளிகளுடன் கார்த்திகைப் பூக்களால் அஞ்சலித்து, நினைவுச் சுடரேற்றி.. இவற்றுடன் எமது கடமை முடிந்ததென்ற நினைப்போடு வாளாதிருக்கின்றோம்.

அன்பானவர்களே! இனிய தமிழ் மக்களே!

பிரிந்தும், பிளவுபட்டும் நின்று இதுவரை காலமும் நாம் சாதித்தது என்ன? தொடர்ந்தும் இதேபோல இருந்தால், இனியும் எதைச் சாதிக்கப் போகிறோம்? வேற்றுமை களைந்து ஒற்றுமை என்ற உயரிய ஆயுதத்தைக் கையிலெடுத்து, ‘தமிழன் சாதித்தான்’ என்ற வரலாற்றுப் பெருமையை நமதாக்கிக் கொள்வோமா?

உணர்வுக் கரங்களைத் தாருங்கள். கை கோர்த்து ஒன்றிணைவோம். மாவீரச் செல்வங்களின் தாயகக் கனவை நிறைவேற்றி இந்த வையத்தில் நிலை பெறுவோம்!

Leave a Reply