எண்ணமெல்லாம் தாயகக் கனவைச் சுமந்து, நமக்காய்த் தம்முயிரை ஆகுதியாக்கி, நன்றி மறவான் என் தமிழன் என்றும், என் கனவை அவன் சுமப்பான் என்றும் நம்பிக்கையோடு தாய்மண் மடியில் தலை சாய்த்துத் துயிலும் தமிழ் மறவர்கள்.சிலருக்கு அக் கொடுப்பனவு கூட இல்லை.அவர்கள் கொண்ட கொள்கைக்காய் உலகெங்கும் பயணித்து அங்கே தம் இன்னுயிர் நீத்து இயற்கையோடு கலந்துவிட்ட இறை தந்த நம் கொடைகள்.
வாயாரப் புகழ்கின்றோம். ஆண்டொன்றில் “நாள் “ஒதுக்கி அழுதெழுந்து கடக்கின்றோம். செய்ய வேண்டியது தான். ஆனால் செய்ய வேண்டியது இது மட்டும் தானா??? என் கல்லறை தேடி வந்து கண்ணீர் சிந்திச் செல்வார் என் நண்பர், என் சுற்றம், என்னுறவு என்ற மட்டில் தீர்ந்து விடுமா மாவீரர் நற்கனவு??? இறந்த பின்பும் அவர் அமைதியற்று அழுதுறங்கும் நிலை தந்தவராகி விட்டோமோ நாம் என்றளவில் தான் நீள்கின்றது உண்மை உரணர்வுடையோரது குற்றவுணர்வு. உயிர் கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்று ஆயிரம் முறை சிலாகிக்கும் நாம் ஏன் கொடுத்தார் எதற்கு கொடுத்தார் இன்னும் அக்கொடைக்கான பலன் துளி பெற்றோமா என்றெல்லாம் எண்ணுகின்றோமா? அனைத்தையும் எண்ணித் தொடர வேண்டிய அடுத்த சந்ததியினரிடம் தெளிவான இலக்குகளை சரிவரக்கூறி கடத்திச் செல்கின்றோமா?
தமிழுக்கும்,தமிழ் மக்களுக்கும் அவர்களின் நியாயமான உரிமைக்கும் உத்தரவாதம் வேண்டி, அதன் உன்னதமான தேவை உணரப்பட்டுப் போராட்டங்கள் பல வடிவம் பெற்றன. அதன் நேர்த்தி பேணப் பல கோட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன. அத்தனையும் அப்படியப்படியே இன்று வரை தெளிவுற விளங்கப்படுகின்றனவா? ஒரே சீராய் கொள்கைகள் பேணப்படுகின்றனவா என்றெல்லாம் வினா எழுப்பினால் துயர் தரும் பதில் “இல்லை”. என்பதுவே.
காலத்தோடு மாற்றம் இயல்புதான் என்போரும், காலத்துக்கும் மாற மாட்டோம் என்று நுனிப்புல் மேய்ந்தவராய் உப்புச்சப்பற்ற விடயங்களுக்காய் மல்லுக்கட்டி நிற்போரும் முரண்பட்டு, கொள்கைகள் நூறாகி குழுக்களும் பலவாகி கூறாகிப் போய் நிற்கும் நம்மினத்தின் நிலை கண்டு மாவீர ஆன்மாக்கள் துடித்தழுது விம்மாதோ?
செயல்கள் வீரியம் பெற்றதனால்தான் செய்தவர் “மேதகு தலைவர்” ஆனார். இது பற்றிய புரிதலில் தெளிவு வேண்டும்.
“செயல்’முந்தும் இடத்தில் தான் விளைவுகள் தானாய் வீரியம் பெறும். அதைச் செய்பவன் ஆளுமையை ஏற்றுக் கொள்ளும் இனம் தான் விடியலைப் பெறும்.
இன்று செய்பவன் நான்தான் என்று காட்டுவதில் தான் எத்தனை போட்டி?? எதிரி தன்னிலக்கில் மிகத் தெளிவாக இருக்க, அத்தனை நடவடிக்கையையும் ராஜதந்திரத்தோடும் தூர நோக்கோடும் முன்னகர்த்த, நாம்????????
நம்முள் சிந்தனை திறன் மிக்க மனிதர்கள் பலர் உண்டு. அதில் ஒன்றும் குறைபாடு இல்லை. ஆனால் காலத்தின் தேவை உணர்ந்து அப்படியானவர்கள் தம்முள் சின்னத்தனங்கள் மறந்து, நேர்படப் பேசி ஒருவரையொருவர் அரவணைத்து அங்கீகரிக்கும் குணம் உள்ளதா? தொடங்கும் காரியத்தை முடிவு வரை இட்டுச் செல்லும் வைராக்கியம் உள்ளதா??? செய்பவன் பற்றிய சிந்தனை மறந்து செயல்களின் வீரியம் குறித்து சிந்திக்கும் திறன் உள்ளதா????
இப்படி நமக்குள் நாமே பல கேள்விகள் கேட்டுத் தெளிவுறாத நிலையில் நமக்கான விடியல் என்பது பெருங்கனவே. இத்தனை சிந்தனை தெளிவற்றவர்களுக்காகத்தான் இயற்கை நமக்களித்த இன்னுயிரை ஈந்தோமா என்று மாவீரரும் கலங்கும் நிலை மிக இழிநிலை. தனித்தனி தீவுகளாய்த்தான் நாம் செயற்படுவோம் என்னும் இனத்துக்கு தனியொரு நாடமைக்கும் தகுதி துளியுமில்லை.
உலகப் பரப்பில் நம் இலக்குகள் மிகப்பெரியவை. அதற்கான உழைப்புகள் கொட்டிக் கொடுக்கப்பட வேண்டியவை. சிந்தனைகள் பரந்து விரிந்து உலகை ஆராய்ந்து, நுணுக்கமான நுண்ணறிவுடன் பயணிக்கவேண்டிய நாம், துளி பெறுமதி இல்லா விடயங்களுக்காகத் தம்முள் முட்டிமோதிப் பகை வளர்த்து ஒற்றுமை குறைந்து உருக்குலைந்து போதல் எந்த வகையில் நியாயம்??? தன்னினத்தைப் பழிப்பதும், குற்றஞ் சொல்வதும் இவ்வெழுத்தின் நோக்கம் அல்ல.
உயிர் கொடுத்தவர் கனவை நினைவாக்க, உண்மை உணர்ந்து நமக்குள் கட்டாயம் தெளிவடைய ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டிய “சுய மதிப்பீடு இது. சீரமைக்கப்பட்ட வாய்க்கால் வழிநீர் போல தெளிவடைந்த இனத்தின் சிந்தனைகள் தான் அடுத்த சந்ததியிடம் காத்திரமாய்ப் போய்ச் சேரும்.
ஒவ்வொரு மாவீரனின் கனவும், “விட்டுச் செல்லும் தன் பொறுப்பை மற்றத் தமிழன் சுமப்பான்” என்பதுவே . அவன் சுமந்த ஆயுதம் என்பது வெறும் சன்னம் துப்பும் துவக்குகள் மட்டுமல்ல. எண்ணம் முழுவதும் சுமந்த உன்னதமான கொள்கைகள் அவை.
அவற்றைக் கையேந்தவும் சுமந்து பயணிக்கவும் தூய மனதுகளால் மட்டும் தான் முடியும். மாவீரச்செல்வங்களின் கல்லறை முன்நின்று நம் மனங்களைத் தூய்மைப்படுத்துவோம். தெளிவுற்றுத் திரும்புவோம். என்னால் முடிந்ததனைத்தும் தன்னலமின்றி என் இனத்துக்குச் செய்வேன் என்று திடசங்கற்பம் கொள்வோம். களங்கமற்ற மனதுகளால் கல்லறைகளில் சபதம் செய்வோம்.ஓ மாவீரனே உன் ஆவி கொண்ட தாகமதை, உன் கொள்கை வழி நின்று,உறுதியான என் செயல்கள் கொண்டு தீர்ப்பேன் உறுதி.