கம்போடியாவில் வெளியிடப்பட்ட ஈழத்துப் படைப்பாளிகளின் வெளியீடுகள்

649 Views

கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் இன்றைய தினம் ஆரம்பமாகிய இரண்டு நாள் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் ஈழத்துப் படைப்பாளிகள் இருவரது புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்தாளரும் கவிஞருமான வெற்றிச்செல்வியின் ‘குப்பி’ என்ற சிறுகதை நூலும், வீரகேசரியின் வவுனியா செய்தியாளரும், முன்னாள் பிபிசி தமிழோசையின் வவுனியா செய்தியாளருமாகிய பி.மாணிக்கவாசகத்தின் ‘வாழத்துடிக்கும் வன்னி’  என்ற நூலுமே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

‘குப்பி’ சிறுகதை நூலை நூலாசிரியர் நிகழ்வில் கலந்து கொண்ட ஈழத்து கவிஞர்கள் படைப்பாளிகள் சார்பில் வெளியிட்டு வைக்க கம்போடிய அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் நூலின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

‘வாழத்துடிக்கும் வன்னி’ நூலை வவுனியாவை சேர்ந்த எழுத்தாளர் மேழிக்குமரன் அருந்தவராசா நிகழ்வில் கலந்து கொண்ட ஈழத்து கவிஞர்கள் படைப்பாளிகள் சார்பில் வெளியிட்டு வைக்க, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செயலாளர் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். போர்க்கால வாழ்க்கையைப் பற்றிய 30 சிறுகதைகளை ‘குப்பி’ சிறுகதைத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

வீரகேசரி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகரனின் பின் அட்டைக் குறிப்புடனும் அணிந்துரையுடனும் கூடிய ‘வாழத் துடிக்கும் வன்னி’ என்ற நூல் நீறுபூத்த நெருப்பாக கனன்று மறுவாழ்விற்காகத் துடிக்கும் ஏக்கம் நிறைந்த வன்னி மக்களின் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவாக வெளிவந்துள்ளது.

kuppi 2 கம்போடியாவில் வெளியிடப்பட்ட ஈழத்துப் படைப்பாளிகளின் வெளியீடுகள்மீள் குடியேற்றத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சில விடயங்களும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சென்றடையா நிலையில் மக்களின் துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியாத அளவிற்கு மறைக்கப்பட்டிருந்த விடயங்களையும் வன்னி மக்கள் அனுபவித்த அவலங்களையும் இந்த நூலாசிரியர் விபரித்துள்ளார்.

அவரது படைப்பு சமுதாயத்திற்கு ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல, இந்தப் பணி காலத்தின் கட்டாயத் தேவையுமாகும் என்று தனது அணிந்துரையில் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். ‘குப்பி’ மற்றும் ‘வாழத்துடிக்கும் வன்னி’ ஆகிய இரு நூல்களும் விரைவில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி அகிலினி நந்தகுமாரின் ‘சுவர்களில்லாத ஒரு நகரம்’ என்ற ஆங்கிலக் கவிதை நூலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அவரின் தாயார் ரஞ்சுதமலர் நந்தகுமார் சார்பில் தமிழ்ச் சங்கத் தலைவரிடம் கைளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மேழிக்குமரன் அருந்தவராசா எழுதிய நூல்களும் மலேசிய தமிழ்ச் சங்கத் தலைவர் செயலாளருக்கு வழங்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவுறுகின்ற இந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றையும் சேர்ந்த 350 கவிஞர்களும், பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply