கடந்த ஐந்து வருடங்களில் ஐதேக, கூட்டமைப்புக் கூட்டு சாதித்தது என்ன? மஹிந்த

கடந்த ஐந்து வருடமாக நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டு அரசாங்கத்தில் எமது அரசாங்கம் முன்னெடுத்த எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாமல் போயுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று குற்றம்சாட்டினார்.

அலரிமாளிகையில் நேற்று தேசிய ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து உரையாடிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தென்னிலங்கை போன்று வடக்கையும் கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.  ஆனால் நாம் எடுத்த நடவடிக்கைகள் எதனையும் கடந்த 5 வருடத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியவில்லை.

அவர்கள் எமது அபிவிருத்தித் திட்டங்களை விமர்சித்து கொண்டிருந்தார்களே தவிர எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் சில ஊடகங்கள் அவர்களை ஆதரித்துக் கொண்டிருந்தது. அரசியல்வாதிகள் விடும் தவறுகளை தட்டிக் கேட்பவராக ஊடகங்கள் செயல்பட வேண்டுமே தவிர தேவையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு ஊதுகுழலாக செயற்படக் கூடாது.

தெற்கு தொடர்பான செய்திகள் வடக்கிலும் வடக்கு தொடர்பான செய்திகள் தெற்கிலும் எழுதப்படுகின்ற போதிலும் அவை முழுமையாக இரு பகுதி மக்களையும் சென்றடைவதில்லை. எனவே இதுபற்றி கலந்துரையாடி இரு பகுதி மக்களும் புரிந்துணர்வுடன் செயற்பட கூடிய வகையில் ஊடகங்கள் தமது செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.