ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்படவேண்டும் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

537 Views

சமூகப் பொறுப்புடன் ஒவ்வொரு குடிமகனும் நடந்து கொள்வது மட்டுமன்றி மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் மற்றும் பொது சுகாதரப் பணியாளர்கள் சிறப்புக் கவனம் கொண்டிருப்பதும் அவசியம் என  வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம்.

அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்த வேண்டும்.

அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்கு திட்டமிட்டு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply