ஐ.நா தீர்மானம் உலக நாடுகளை ஏமாற்ற சிறீலங்கா திட்டம்?

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா விவகாரங்கள் விவாதிக்கப்படுவதையோ அல்லது சிறீலங்கா மீது மேலதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதையோ தடுக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த வாரம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியப் பிராந்தியத்திற்கான செயலாளர் அலிஸ் வெல்ஸ் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானம் குறித்து பேசியது ஒருபுறம் இருக்க, பொதுநலவாய நாடுகளின் தென்னாசியா பிராந்திய பணிப்பாளர் கெரத் பெய்லி இந்த வாரம் சிறீலங்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவைச் சந்தித்த அவர் ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார். கெரத்துடன் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் சாரா கட்டனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

ஆனால் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை சிறீலங்கா நாடாளுமன்றம் அங்கீகரிக்கவில்லை என அமெரிக்க மற்றும் பிரித்தானியா அதிகாரிகளுக்கு தெரிவித்த சிறீலங்கா அதிகாரிகள், தாம் தமிழ் மக்களுடன் நல்லிணக்கப்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

யாழ்மாவட்டத்தின் முன்னார் அரச அதிபர் திருமதி பி. எம் சார்ள்ஸ் அவர்களை ஆளுநராக நியமித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரிடம் அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் பல இடங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், வடமாகணசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் எனவும், அதன் கால தாமதத்திற்கு முன்னைய அரசே பொறுப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஐ.நா தீர்மானத்தை முற்று முழுதாக எதிர்க்காது, அதில் உள்ள சில சரத்துக்களை மாற்றும் முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருவதாகவும், அதில் சிறீலங்கா படையினர் மீதான விசாரணைகளை நீக்கும் திட்டங்களும் உண்டு எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.