ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்: சுரேஷ் அழைப்பு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையானது தமிழ் மக்களுக்குச் சரியான பாதையை வகுத்துக் கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம் எனத் தெரிவித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், வெளியில் இருந்து ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தமிழ் மக்களின் இன விடுதலைக்காகப் பல தரப்புக்கள் போராடியுள்ளனர். தங்களின் உயிர்களைப் பொருட்படுத்தாது போராடிய அனைவரையும் எமது கூட்டணியில் இணையுமாறு இந்தச் சாந்தர்ப்பத்திலே அழைப்பு விடுக்கின்றேன். எமது கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்கள் இத்தனை ஆண்டுகளாக கோரி வந்த இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வான தீர்வு கிடைக்க வேண்டும்.

எனவே தற்போது எமக்கு எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், தமிழரின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் ஆகிய அடிப்படையான விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்த வேண்டும். எமது கட்சிக்கு என்று நாற்பது ஆண்டுகால வரலாறு உள்ளது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நாம் நடாளுமன்ற ஜனநாயக முறைமையை ஏற்று செயற்பட்டிருக்கின்றோம்.

அதற்கு முன்னர் ஆயுதப்போராட்டம் நடத்தியிருக்கின்றோம். நாம் பல தரப்புக்கள் இணைந்து புதிய கூட்டணி அமைத்து இருக்கின்றோம். ஆகவே வெளியில் இருந்து ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம். தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க மிகப்பெரிய போராட்டங்களை செய்திருக்கின்றோம். பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம். எமது உரிமைக்காக அனைத்தையும் இழந்துள்ளோம். இழக்கக்கூடாத பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம்.

ஆகவே வெளியில் நின்று வெறுமனே ஐக்கியத்தைப் பேசுவதை விட, நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும். சிங்கள, பெளத்த அரசு எதுவாக இருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பதை விடுத்து, இன்று இருக்கக் கூடிய அகப் புறச் சூழ்நிலைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து நாம் எவ்வாறு செயற்பட வேண்டும், அதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என நாம்ப்சிந்திக்க வேண்டும்.

அதற்காக நாம் இது தொடர்பில் அனைத்துத் தரப்புகளும் இணைந்து இது தொடர்பில் விவாதித்து, நாம் ஆக்கபூர்வமாகச் செயற்படுவோம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையானது தமிழ் மக்களுக்குச்சரியான பாதையை வகுத்து கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்துத் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்” என்றார்.

79 1 ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்: சுரேஷ் அழைப்பு