தொழிலாளர்களின் உரிமைகள் பலவற்றையும் வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க பலம் அவசியமாகும்.எனினும் சமகாலத்தில் தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவுகள், தலைமைத்துவ மோகம் உள்ளிட்ட பலவும் தொழிற்சங்கங்களின் நம்பகத்தன்மைக்கு குந்தகமாக அமைந்துள்ளதுடன் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோவதற்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.இந்நிலையில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அதனால் ஏற்படும் சாதக விளைவுகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.தெற்காசிய தொழிற்சங்க கருத்தரங்கில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொழிற்சங்க கலாசாரம் என்பது உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது.இந்த வகையில் உலகில் தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கக் காரணம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பவற்றைப் பேணி அவர்களை சுதந்திரமாக வாழச் செய்வதற்காகும்.இந்நிலையில் தொழிலாளர் ஒருவர் தான் சார்ந்துள்ள தொழிற்சங்கத்தினதும், தனது நாட்டு தொழிற்சங்க இயக்கத்தினதும் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வதோடு, தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு தொழிற்சங்கத்தில் தனது உரிமை என்ன? கடமைகள் என்ன ? என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.இவ்வாறில்லாத பட்சத்தில் தொழிற்சங்கத்தினால் அவருக்கு எவ்விதமான நன்மைகளோ அல்லது அவரால் தொழிற்சங்கத்திற்கு எவ்விதமான நன்மைகளோ ஏற்படப்போவதில்லை.மாறாக இந்த அங்கத்தவர் தொழிற்சங்கத்தில் வெறுமனே அர்த்தமற்ற ஒரு அங்கத்தவராக இருக்கவேண்டிய நிலையே ஏற்படும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.எனவே தொழிற்சங்கம் ஒன்றின் அடிப்படை நோக்கங்கள் பூரணமாக நிறைவேற்றப்பட வேண்டுமானால் அங்கத்தவரிடத்தில் தொழிற்சங்கம் குறித்த விழிப்புணர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உலகெங்கும் காணப்படும் தொழிற்சங்கங்கள் தோன்றிய விதமும் அது வளர்ச்சியுற்று அபிவிருத்தியடைந்த விதமும் கைத்தொழில் புரட்சியினையோ அன்றேல் பெருந்தோட்ட விவசாயப் புரட்சியினையோ சார்ந்தும் ஒட்டியும் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.இந்த வகையில் சர்வதேச தொழிற்சங்கங்களுக்கு மத்தியில் இலங்கையிலும் தொழிற்சங்க கலாசாரம் படிப்படியாக தலைதூக்க ஆரம்பித்தது.இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் 1893 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.1922 ம் ஆண்டு ஏ.ஈ.குணசிங்க இலங்கை தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தினை துறைமுக தொழிலாளர்கள் மத்தியில் ஆரம்பித்தார்.தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி 1919ம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர் நலன் கழகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1920 ம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தை கோ.நடேசையர் ஆரம்பித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் உள்ளாகிவந்த நிலையில் ‘வாயில்லாப் பூச்சிகளாகவே’ அவர்கள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தொழிற்சங்கங்கள் அமைத்து குரல் கொடுக்க வேண்டிய தேவை மேலெழுந்தபோதும் நிர்வாகம் அதற்கு இடமளிப்பதாக இல்லை.இலங்கையில் தொழிற்சங்க சட்டங்கள் பல நடைமுறையில் இருந்தன.எனினும் அச்சட்டங்களால்.
தொழிலாளர்கள் எவ்விதமான நன்மையும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே நீண்ட காலமாக இருந்து வந்தனர்.தொழிலாளர்கள் கூட்டம் நடாத்துவதற்கு இடமளிக்கப்படாத நிலையில் கூட்டம் நடத்தக்கூடிய இடங்கள் தோட்ட உரிமையாளர்களுக்கே சொந்தமாக இருந்தன.தொழிற்சங்க இயக்கத்தினர் தோட்டங்களுக்குச் சென்று பணியாற்ற முடியாதபடி 1917 ம் ஆண்டின் 38 ம் இலக்கச் சட்டம் தடை விதித்திருந்தது.அதனையும் மீறி தோட்டப் பகுதிகளுக்குச் சென்று பணியாற்ற முயன்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக அறிந்துகொள்ள முடிகின்றது.கொழும்பு போன்ற நகர்ப்புற பகுதிகளில் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றபோது தோட்ட உரிமையாளர் தமது தொழிலாளர்கள் நகரங்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு தடை செய்திருந்தனர்.அவ்வேலை நிறுத்தங்கள் தோட்டங்களுக்கு பரவுவதைத் தவிர்க்கவே உரிமையாளர்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் துயர் கண்டு பிரேஸ்கேடில் என்ற வெள்ளைக்கார துரை கொதித்தெழுந்த சம்பவங்களும் மலையக வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாக அமைந்தன.’இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக நீங்கள் ஆயுதமாக நிற்பதைக் காண்கிறேன்.என் அன்புக்குரிய தோழர்களே நான் விரைவில் உங்கள் அழகிய நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன்.
நான் உங்களை மீண்டும் ஒரு போதும் காணமாட்டேன்.ஆனால் தோழர்களே நான் உங்களுடைய போராட்ட உணர்வுகளை உலகிலுள்ள எல்லா தொழிலாளர்களின் நெஞ்சங்களுக்கும் எடுத்துச் செல்வேன் ‘ என்று காலிமுகத்திடலில் அவர் கூறிய வார்த்தைகள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தன.1937 ஒக்டோபர் மாதம் 31 ம் திகதி பிரேஸ்கேடில் நாட்டிலிருந்தும் வெளியேறினார்.இது மலையக வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.
பிளவுகள்
தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் உள்ளீர்க்கப்படுவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.பெரும் போராட்டத்துக்கு மத்தியிலேயே தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்ளீர்க்கப்பட்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கின.இது ஒரு நல்ல சகுனமாக அமைந்தது.இந்த வகையில் தோட்டப்புறங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய அல்லது கோலோச்சிய காலமொன்று இருந்தது.எனினும் பின்னாளில் மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் தோற்றம் பெறலாயின. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற பலர் ஏனைய தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டமையும தெரிந்ததாகும்.
தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க தொழிலாளர்களின் ஒற்றுமையும் கேள்விக்குறியானது. தொழிற்சங்கங்கள் தமது இருப்பு, அடையாளம், ஆதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொழிலாளர்களை பிரித்தாளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒரு பலமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை தொழிற்சங்கங்களும் தமக்கிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் வளர்த்துக் கொண்டு தமக்கிடையே சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.இது மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பாக அமைந்த நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் அது ஆப்பு வைப்பதாக அமைந்ததெனலாம்.இத்தகைய குளறுபடிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தொழிற்சங்கங்கள் தமக்கிடையே ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தித் கொண்டு பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் அது தொழிலாளர்களின் நலன்களுக்கு வலுசேர்க்கும் என்ற கருத்து வெளிப்பாடுகள் இருந்து வந்தன.எனினும் அது சாத்தியப்படாத நிலையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமைகளே இருந்து வருகின்றன.இதனிடையே தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பன தமக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு ‘தமிழ் முற்போக்கு கூட்டணி ‘ என்னும் பெயரில் இணைந்து செயற்படுகின்றமையானது பலரினதும் கவனத்தை ஈர்த்திருந்ததையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.
தொழிற்சங்கங்கள் மலையக மக்களின் காவலனாக ஒரு காலத்தில் விளங்கின.அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களின் நலனுக்கு வலுசேர்த்தன.எனினும் சமகாலத்தில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களை புறந்தள்ளி செயற்படுவதாகவும், தொழிற்சங்கங்களை மையப்படுத்தி அரசியல் பிரவேசம் செய்ய முற்படும் தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர் தேவைகளை புறந்தள்ளி செயற்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இதனால் தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மைக்கு பழுது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தவல்லதாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் நலன்களுக்கு குரல் கொடுப்பது கட்டாய தேவையாகியுள்ள நிலையில் அது தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உந்துசக்தியாகும்.இந்நிலையில் தெற்காசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் , தெற்காசிய தொழிற்சங்க கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.மேலும் தொழிலாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான புதிய சவால்களை இப்போது எதிர்கொள்கின்றனர்.தொழிற்சங்கங்கள் மரபுவழி அணுகுமுறையில் இருந்து நவீன தொழில்நுட்ப உள்ளடக்கங்களை கொண்ட பொறிமுறையை உள்வாங்க வேண்டும்.
பிராந்தியத்தின் பலதரப்பட்ட தொழிலாளர்களை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்குள்ளேயே பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை அடைவது அவசியம்.தொழிற்சங்கங்களின் பின்னணி அல்லது தொழிலை பொருட்படுத்தாமல் அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் செயற்பட வேண்டும்.
தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியம், மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுக்காக தொழிற்சங்கங்கள் வாதிடுவதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் சிந்திக்க வேண்டும் என்றும் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.இதனடிப்படையில் தொழிற்சங்கங்கள் காலமாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு ஐக்கியத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.