ஏ 9 வீதி சோதனைச் சாவடிகளை உடன் அகற்றுங்கள்: சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்து

324 Views

வடக்கில் ஏ 9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் –

“யாழ். ஏ 9 வீதியில் 10 இற்கும் மேற்பட்ட இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மக்கள் இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர்.

கஞ்சா, குடு என்ற பெயரில் தமிழ் மக்கள் வீதிகளில் இறக்கப்பட்டு தொல்லைப்படுத்தப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது. அத்துடன் இந்தச் சோதனைச் சாவடிகளில் பெண் பொலிஸாரோ, பெண் சிப்பாய்களோ இல்லை. இதனால் தமிழ்ப் பெண்கள் பெரும் அசெளகரியங்களுக்கு ஆளாகின்றனர்.

இதனால் யாழ். ஏ 9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டு, தமிழ் மக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப் படவேண்டும். இது தொடர்பான நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ எடுக்க வேண்டும். இவ்வாறான சோதனைகள், இறக்கி ஏற்றல்கள் மூலம் உங்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

அத்துடன் யுத்தத்தில் பேரழிவைத் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான எந்தவித உயிரிழப்பு நஷ்டஈடுகளோ அல்லது பொருள் இழப்பு நஷ்ட ஈடுகளோ யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டபோதும் எந்த அரசாலும் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக தம்மைக் கொல்ல வெளிநாடுகளிட மிருந்து அரசுகள் கொள்வனவு செய்த நவீன ஆயுதங்களுக்கான வரியையும் தமிழ் மக்கள் செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.

Leave a Reply