ஏழு நாட்களுக்குள் முதலீட்டுச் சபையின் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்

முதலீட்டு அனுமதியை ஏழு நாட்களில் நிறைவு செய்வதற்கான பொறிமுறையொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இச்செயற்பாடு தற்போது நாட்கள், வாரங்கள் அல்லது சில நேரங்களில் மாதங்கள் எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மே 19ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை முதலீட்டுச் சபையின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கான மாற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட கண்காணிப்புக் குழு முதலீட்டு அனுமதிகளை விரைவாக வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாட்டு முதலீட்டு திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி பெற வேண்டிய அரசு நிறுவனங்களின் நிர்வாக மட்ட அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“இது இதுவரை வெற்றிகரமாக உள்ளது, மேலும் புதிய முதலீட்டு சட்டத்தின் கீழ் இன்னும் திறமையான மற்றும் நட்புரீதியான முறையில் அனுமதிகளை வழங்க முடியும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் உதவியின் கீழ் இலங்கையின் எதிர்காலத் தேவைகள் மற்றும் உலகளாவிய முதலீட்டுச் சட்டங்களுக்கு இணங்கக்கூடிய புதிய முதலீட்டுச் சட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக விசேட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை விரைவாகக் கொண்டுவர தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் எவ்வாறு திருத்தங்களைச் செய்வது என்பதை தெளிவுபடுத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் 60% பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.