எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து போராடுவோம் -சிறிநகர் மக்கள்.

வுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள், தமக்கான வீட்டுத்திட்டம், உட் கட்டுமான வசதிகள், காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் போன்ற வசதிகள் இதுவரை அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், தமக்கான தேவைகளை நிறைவேற்றித் தருமாறும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DSC00106 எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து போராடுவோம் -சிறிநகர் மக்கள்.

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராமத்தில் வாழும் மக்கள் அதிகம் வறுமைக்கு உட்பட்டவர்களே. 26 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி, உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. உட்கட்டுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. மைதானம் இல்லை, வீட்டுத் திட்டம் வழங்கவில்லை. உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் இதுவரை எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DSC00090 1 எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து போராடுவோம் -சிறிநகர் மக்கள்.
வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகளாவன:-
•26 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு வழங்கப்படாத காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.
•உட்கட்டுமான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
•மைதானம் அமைத்துத்தர வேண்டும்.
•வீடு அற்றவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவி, சீரற்ற வீடுகளை திருத்தம் செய்ய நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
•பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, ஒழுங்கான வாய்க்கால் வடிகாலமைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கிராம மக்கள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த பெப்ரவரி 09 திகதி தொடக்கம் மேற்கொண்டு வருகின்றனர். உரிய அதிகாரிகள் தமக்கான நீதியை பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

பல வருடங்கள் ஆகியும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் அவர்கள் எவரும் இவ் விடயத்தில் கரிசனை கொள்ளவில்லை. போராட்டத்தை முன்னெடுத்து ஏழுநாட்கள்வரை வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளோ, அரச அதிகாரி களோ தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியவில்லை என விசனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், எட்டாம் நாள் போராட்ட இடத்திற்கு பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் சென்றிருந்ததுடன், அவர்கள் மக்களுடன் கலந்துரையாடி முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக சாதகமாக ஆராய்வதாக தெரிவித்திருந்தனர். எனினும் குறித்த மக்களுக்கு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததை தொடர்ந்து போராட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

IMG 8946 1 எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து போராடுவோம் -சிறிநகர் மக்கள்.

இதேவேளை கிராமத்தின் பின்பகுதியில் உள்ள குளத்தின் நீரேந்து பகுதியில் 55 பேரது காணிகள் அமைந்துள்ளன. அதனை விடுவிப்பது தொடர்பாக தமது தலைமை அலுவலகமே தீர்மானிக்க முடியும். எனவே நீங்கள் கோரிக்கைகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளிற்காக அதனை எமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதாக போராட்டக்காரர்களை சந்தித்த நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் 50 நாட்களை எட்டியும் தீர்வு கிடைக்காமையினால், இது குறித்து குறித்த கிராம மக்களால் துண்டுப்பிரசும் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் :
எமது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக எமது சனசமூக நிலைய முற்றத்தில் இரவு பகலாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு. வீடு அற்றவர்களுக்கு வீடு அமைத்துக்கொடு, வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வீடுகளை திருத்துவதற்கு உதவு. பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளிக் கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், கிராமத்தின் வடிகாலமைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம்.

பிரதேச செயலாளர், உரிய திணைக்களங்களுடன் பேசி பிரச்சினைகளை பதினான்கு நாட்களுக்குள் தீர்வு காண்பதாக கூறிய போதிலும், இன்னும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது எமக்கு கவலையளிக்கின்றது. எமது கோரிக்கைகள் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டு, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததன் விளைவாகவே நாங்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

தேர்தல் காலங்களில் எங்களுடைய கிராமங்களுக்குள் படையெடுக்கும் இவ் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் தமிழ், தமிழன் எனக் கூறிக் கொண்டு வாக்குகளை பெற்றுச் செல்லும் அதே நேரம், இன்னொரு தரப்பு அபிவிருத்தி, வீட்டுத் திட்டம், வேலைவாய்ப்பு என மக்களை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறது.

அது மட்டுமன்றி இவர்களுக்கு வாக்களித்துவிட்டு காலங்காலமாக எங்களால் ஏமாற முடியாது. மேலும் வன்னி மாவட்டத்தில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களை விட வேறு யாரும் எங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களின் சரியான கோரிக்கைகளை கேவலப்படுத்துவதாகவும், இவ் அரசியல் அதிகார சக்திகள் மக்களை முட்டாள் ஆக்குவது போலவும் இருந்து வருகின்றது.

மேலும் இந்த விடயத்தில் எங்களுடைய கோரிக்கைகளை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தி விட்டோம். ஆனால் முடிவு மட்டும் கிடைப்பதாக இல்லை. ஒவ்வொரு அதிகாரியும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தி விட்டு எங்களுடைய வரிப்பணத்தில் சம்பளத்தையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறார்கள்.

நாம் கேட்கும் கோரிக்கையானது அரசினால் தீர்த்து வைக்கக் கூடியது. எனவே எங்களுடைய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தையும், உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் கேட்டு நிற்கின்றோம். என குறித்த கிராமமக்கள் துண்டுப் பிரசுரத்தினை வவுனியா நகர் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்தும், தமக்கான சரியான தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த கிராம மக்கள் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தினை 19.04.2021அன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முன்னெடுத்திருந்தனர்.

DSC01233 1 எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து போராடுவோம் -சிறிநகர் மக்கள்.

இப்போராட்டத்தில் 70 நாட்களாக கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ முன்வரவில்லை. எம் தேவைகளை நிறைவேற்றித் தருவதாக பிரதேச செயலாளர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியதுடன், எமக்கு 14நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளில் முதற் கட்டமாக அலைகரைப் பகுதி காணிப்பிரச்சினை மற்றும் விளையாட்டு மைதான பிரச்சினைகளை முடித்து தருவதாக கூறினார். எனினும் 70நாட்களை கடந்தும் அவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத பட்சத்திலே மனித சங்கிலிப் போராட்டத்தினை முன்னெடுத்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

வவுனியா குளத்தினை நிரவி வியாபாரத்திற்காகவும், சுற்றுலாத் துறைக்காகவும் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், 26 வருடங்களாக நிரந்தர வீடுகள் அமைத்து வசித்துவரும் எமக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு ஏன் அதிகாரிகள் பின்னடிக்கின்றார்கள். நாமும் இந்த மாவட்டத்தின் சாதாரண மக்களே. எனவே இதையும் அரச அதிகாரிகள் கண்டு கொள்ளாத பட்சத்தில் எமது போராட்ட வடிவத்தை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்போம் என்றனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், சிறிநகர் மக்கள் மனிதர்கள் இல்லையா, காணி உறுதிப் பத்திரத்தை வழங்கு. 26 வருடங்களாக எம்மை ஏமாற்றுவது சரியா? நியாயமான கோரிக்கைகளிற்கு தீர்வு என்ன? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

எனினும் வவுனியா சிறிநகர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் (02.05) 84 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் சிறிநகர் கிராம மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுரையாளர்: பாலநாதன் சதீஸ்