எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி கூறமுடியாது – விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் இம்முறை எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி தம்மால் குறிப்பிட்டுக் கூறமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

கடந்த கால வரலாற்றையும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளைம் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரித்தைப் பயன்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியினால் பொது இணக்கப்பாட்டிற்கு வந்த 5 தமிழ் கட்சிகளின் கூட்டமொன்று கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானங்களை காலம் தாழ்த்தாது ஏனைய நான்கு கட்சிகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் அறிவிப்பதாக நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிப்பது தொடர்பாக தமது நிலைப்பாட்டையும் தமிழ் மக்கள் கூட்டணி வெளியிட்டுள்ளது.

எந்தவொரு பிரதான கட்சிகளினதும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் கட்சிகளினால் கூட்டாக முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் தம்முடன் பேசுவதற்கு முன்வரவில்லை என்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாகத் தமிழ் மக்களின் மிகவும் நியாயமான இந்தக் கோரிக்கைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தமிழ் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள், துன்பங்கள் மற்றும் துயரங்களை எடுத்துக் கூறி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆற்றலும், ஆளுமையும், துணிச்சலும், தூர நோக்குப் பார்வையும் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பாக இனவாதக் கருத்துக்களை முன்வைத்து பேரினவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் ஒரு குறுகிய அரசியலிலேயே பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள் என அவர் விமர்சித்தார்.

துரதிஸ்டவசமாக தென்னிலங்கையின் தேர்தல் இயக்கவியலும் முற்றுமுழுதாக மகாவம்ச மனோநிலைக்கு உட்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், திங்கட்கிழமை வரை குறிப்பிட்ட ஐந்து தமிழ் கட்சிகளும்கூட ஒரு பொது முடிவிற்கு இதுவரை வரவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதான சிங்களக் கட்சிகள் எம்முடன் பேசக்கூடத் தயாராக இல்லாத சூழ்நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு விரல் நீட்டிக் காட்டும் தார்மீக உரிமை தமக்கு இல்லை என்பதே தனதும் தனது கட்சியினதும் நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மதிக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், அந்த உரித்தை தமிழ் மக்கள் பயன்படுத்த விரும்பின் அதற்கு தாம் தடையாக இருக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

தம்மால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளாத சூழ்நிலையில் அவற்றை கைவிட்டு எந்த ஒரு வேட்பாளருக்கேனும் களம் அமைத்து, கூட்டங்கள் கூட்டி, வெளிப்படையாக வாக்குக் கேட்க ஐந்து கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகித்த எவரும் முன்வரமாட்டார்கள் என்றும் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழ் மக்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடக்கூட விரும்பாத வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்கும் தார்மீக உரிமை எந்த ஒரு கட்சிக்கும் இல்லை என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஜனாதிபதி தேர்தலை அணுகும் வகையில், தாம் தயாரித்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளை பிரதான கட்சிகளின் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும், தமது அரசியல் நடவடிக்கைகளை இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை சர்வதேச சமூகம் இனிமேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் ஏமாந்து போகாமல் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.