ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு பிணை!

ஊடகங்களில் செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை செய்தியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான சுதந்திர ஊடகவியலாளர் செ.நிலாந்தன்இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் மீது கடந்த 26.02.2019 அன்று செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால் குறித்த வழக்கு தொடர்பாக கடந்த பத்து மாதங்களாக ஊடகவியலாளருக்கு அழைப்பு கடிதமோ, அழைப்பாணையோ வழங்கப்படாத நிலையில் கடந்த 02.01.2020 அன்று இரவு 9 மணியளவில் ஏறாவூர் பொலிஸார் ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு சென்று அவரை பொலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்

இந்த  நிலையில் ஊடகவியலாளர் நிலாந்தன் சட்டத்தரணி ஊடாக நேற்று 08.01.2020 புதன் கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜரான போது நீதிபதி கருப்பையா அவர்கள் ஊடகவியலாளரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியதோடு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் எதிர்வரும் 28.02.2020 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.