ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்…

731 Views

தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் தமிழ்மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஊடகர் சத்தியமூர்த்தியின் நினைவுநாள்…..இந்தநாளில் அவர் எம்மோடு வாழ்ந்த நினைவுகள் முன்னெழுகின்றன…

அழிக்கமுடியாத அந்த நினைவுகள் எம்மை என்றும் வருத்துவனவாக இருக்கும் நிலையில் அவர்பற்றி பதிவிடுவது அவசியமாகிறது. எங்களுடன் சேர்ந்து அன்பும் அரவணைப்புமாக வாழ்ந்து…அன்பை விதைத்துவிட்டு எறிகணையின் தாக்குதலில் சத்தமின்றி உயிர்பிரிந்துவிட்ட அவரின் நினைவுகள் எம்முள் மெலெழுகின்றன.

சத்தியமூர்த்தி என்றவுடன் ஆங்கிலமும் தமிழும் கலந்த அந்த பேச்சு….வியர்வையை துடைத்தபடியே சிரிக்கும் அந்த சிரிப்பு…….எப்போதும் துருவித்துருவி கேட்கும் ஊடகனுக்கேயுரிய இயல்பு… எவ்வளவு நெருக்கமான நட்பெனினும் தன்கருத்தை விட்டுக்கொடுக்காமல் விவாதிக்கும் நுண்ணறிவு…..என எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

சத்தியமூர்த்தி ஊடகத்துறையின் சொத்து என்றால் மிகையல்ல. ஊடகத்துறையில் நிறைய சாதிக்கவேண்டிய வயதில் காலம் அவரைப்பிரித்துவிட்ட சோகம் இன்னமும் எம்மை வருத்தியபடிதான் உள்ளது.

1972 இல் யாழ்மாவட்டதில் இணுவில் எனும் ஊரில் பிறந்தவர். தாத்தா, அம்மம்மாவின் அரவணைப்பில் மண்டைதீவில் வாழ்ந்து, மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் தரம் ஐந்தாம் வகுப்புவரை கல்விகற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். இந்துக்கல்லூரிக்கு சென்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே எழுதும் பணியில் ஆர்வமுற்றிருந்தவர் சத்தியமூர்த்தி. விளையும் பயிரை முளையிற் தெரியும் என்ற முதுமொழிக்கிணங்க சிறுவயதிலேயே இனங்காணப்பட்டவர். வாசிப்பதில் சிறுவயதில் இருந்தே ஈடுபாடு கொண்டிருந்தவர்.

1995இல் சிறிலங்கா இராணுவபடையெடுப்பின் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்த பின் வன்னியில் கால்பதித்து ஊடகங்களில் பல்வேறு எழுத்துப்பக்கங்களில் பங்களித்து தன்திறமையினை வெளிக்காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் இவரது திறமைகள் பல்வேறு விதமாக வெளிவந்தன.sathiyamoorthi ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்...

தொடர்ந்து தன்னுடைய நற்பண்புகளாலும் இன்முகத்தினாலும் ஊடகஅறிமுகங்களை பெற்று அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டில் முனைப்பு பெற்று முன்னேறினார். வன்னியில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனை ஆலோசகராக கொண்டு செயற்பட்ட ‘எழுகலை இலக்கியப் பேரவையில்’ முக்கிய இடம் வகித்தார். பேரவையின் செயற்பாடுகளுக்கு ஏனைய நண்பர்களுடன் இணைந்து பாடுபட்டார். இளம் படைப்பாளர்களினதும், ஆர்வலர்களினதும் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அந்த அமைப்பின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றார்.

வன்னிமண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சத்தியமூர்த்தி வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாடு, ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களில் தன்னுடைய கதைகளை கட்டுரைகளை விமர்சனங்களை எழுதிவந்தார். அதேவேளை அரசசுகாதார திணைக்களத்திலும் அவருக்கான பணி அமைந்தது.

ஆனால் அவரின் ஆர்வமும் ஈடுபாடும் ஊடகப் பணியிலேயே இருந்தன. அவரிடம் காணப்பட்ட திறமையும் ஆர்வமும் அவரை புலம் பெயர்நாட்டு மக்களுக்கான செய்தியாளனாக்கியது. புலத்து மக்களுக்காக ரீ.ரீ.என், தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை அவர் செய்தார். தனது செய்திமுறையில் தனக்கென தனிமுத்திரை பதித்து, அதனூடாக சத்தியமூர்த்தி உலகத்தமிழர்களின் விருப்பத்துக்குரிய செய்தியாளராக தன்னை தகவமைத்துக்கொண்டார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அவரது அறிவும் ஆளுமையும் புலம்பெயர் ஊடகங்களையும் அழகுசெய்தன.

கிளிநொச்சியில் இயங்கிய தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் செயற்பாட்டுக் காலம் வரையில் பங்களிப்பு செய்ததில் சத்தியமூர்த்திக்கு மனநிறைவு இருந்தது. எப்போதும் ஒரு செய்தியாளனுக்குரிய துடிப்போடும் சிந்தனையோடும் காலத்தை நகர்த்தியவர்…தன்னுடைய மிதிவண்டியில் எப்போதும் திரிந்து செய்தியை சேகரித்தவர். ஊடகப்பணியை தவிர எதுவும் நினைத்ததுகூட இல்லை. சிறந்த நேர்மையான விமர்சகன்….

மூத்தோரையும் இளையோரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்லும் கலையில் கைதேர்ந்தவர்….தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் கெட்டித்தனம் கொண்ட சத்தியமூர்த்தி தத்துவார்த்தரீதியாக வாதாடும் திறமைகொண்டவர்.

திட்டமிட்டவகையில் சிறிலங்கா அரசினால் தமிழ்மக்கள்மீதான போர் முடுக்கிவிடப்பட்ட நாட்களில் போகுமிடம் தெரியாமல் அலைந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே அவரும் தன் குடும்பத்தினருடன் அலைந்தார். தன் மிதிவண்டியில் மகளையும் அத்தியாவசிய பொருட்களையும் சுமந்தபடி சென்றார்.

கிளிநொச்சி முதல் உடையார்கட்டு ஈறாக நாளும் பொழுதுமாய் எம்முடன் இடம் பெயர்ந்துதிரிந்த அவர் 12.02.2009 அன்று தேவிபுரம் பகுதியில் அவருக்கெனக் காத்திருந்ததுபோல….எங்கோ வெடித்த எறிகணையின் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று அவரை சாய்த்தது. ஒரேமூச்சில் அவரது உயிர்பிரிந்தது….sathy anna ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்...

நாட்டை நேசித்து…செய்தியாளனாக வாழ்ந்த சத்தியமூர்த்தி தமிழ் மக்களுக்கு அன்றொரு செய்தியானார்….காலம் அவரை கணக்கில்லாமல் கவர்ந்துகொண்டது.

தன் பெண்குழந்தை பற்றி சத்தியமூர்த்தி பல கனவுகளைக்கொண்டிருந்தார். பனிபொழியும் அதி காலையில் ஆஸ்மா நோயையும் பொருட்படுத்தாது….”கைவீசம்மா கைவீசு….” என்று மகளுக்கு பாட்டுப்பாடி ஊஞ்சலாட்டும் அன்புத்தந்தையாகவும் மகளுக்கு அறிவுசார் புத்தகங்களையே பரிசளிக்கவேண்டும் என ஆசைப்பட்ட ஒரு தந்தையாகவும் விளங்கியவர்.

சத்தியமூர்த்தியின் கனவுகளை சுமந்த அவரது மகள் சிந்து….இன்று 13 வயதுப்பிள்ளையாய் எம்முன் வளர்ந்து நிற்கிறாள். அதே சாயலுடன். எங்களை காணும்போதெல்லாம் தன் தந்தையைப்பற்றி கேட்பதுடன் அவர் குறித்த பழைய நினைவுகளையும் மீட்டிக்கொள்வாள்.

போர்க்கொடூரத்தில் தந்தையை இழந்த பல ஆயிரக்கணக்கான குழந்தைகளில் அவளும் ஒருத்தி. அப்பாவைப்போலவே அனைவரிடமும் அன்புகாட்டுவதில் ஆர்வமாயிருக்கின்றாள் சிந்து.

‘சத்தியமூர்த்தியின் நினைவுடன்…’ – ஆதிலட்சுமி

Leave a Reply