உருவாகின்றது புதிய அரசியல் கூட்டணி – இன்று நடைபெற்ற சந்திப்பில் 20 எம்.பி.க்கள் பங்கேற்பு

15 உருவாகின்றது புதிய அரசியல் கூட்டணி - இன்று நடைபெற்ற சந்திப்பில் 20 எம்.பி.க்கள் பங்கேற்புபுதிய அரசியல் கூட்டமைப்பை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் மெதிவெல பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று முற்பகல் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினருக்கும் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தரப்புகளையும் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் புதிய கூட்டணியை சேர்ந்த அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லன்சா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான பியங்கர ஜயரத்ன, உதயகாந்த குணதிலக்க, சுதத் மஞ்சுள, நிமல் பியதிஸ்ஸ, முஷாரப் முதுநபீன், இஷாக் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் வழிநடத்தல் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செயற்படுகின்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன், அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, வீரகுமார திசாநாயக்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

புதிய அரசியல் கூட்டமைப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டையில் பொதுக்கூட்டமொன்றை நடத்தவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது.