உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (21) நள்ளிரவு வெளியானது.
இந்த விசாரணைக் குழுவிற்கு மேற்முறையீட்டு நீதிபதி ஜானக டி சில்வா தலைமை வகிப்பார். மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க சுனில் ராஜபக்ஸ, பந்துல குமார அத்தப்பத்து ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், இவர்களுடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்து விசாரிக்க இந்தக் குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
மேலும், இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிந்திருந்த அதிகாரிகள், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதலுக்கு உதவிய உயரதிகாரிகள் குறித்தும் இந்தக் குழு விசாரிக்கவுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் இனியும் நிகழாதவாறு தடுத்தல், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆணையம் பரிந்துரை செய்யும் 6 மாதகால ஆயுள் கொண்ட இந்த ஆணையம் இருமாதங்களுக்கு ஒருமுறை இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.