உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் அதிருப்தி

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள், உரியவாறான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யாமல் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதன் மூலம் பயங்கரவாதத்தை செயற்திறன்மிக்கவகையில் கட்டுப்படுத்தமுடியாது எனும் அதேவேளை, எதிர்வருங்காலங்களில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரிப்பதையும் தடுக்கமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சரத்துக்களை நீக்கி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் ஆக்கபூர்வமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அதேவேளை மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஃபியோனுவலா நி ஆலெய்ன், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் பிரதித்தலைவர் மெத்தியூ கிலெற், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் தலைமை அறிக்கையாளர் ஓவா பால்டி, கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஐரின் கான், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நியலெற்சொஸி வோல், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலொர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மார்க்ரெட் சற்றெர்த்வெய்ட், சிறுபான்மையின விவகாரங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பெர்னாண்ட் டி வெரென்ஸ், மத மற்றும் நம்பிக்கைகள்சார் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் நஸிலா கனேயா, சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனிதாபிமற்ற தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஏலிஸ் ஜில் எட்வார்ட்ஸ் ஆகிய 10 பேர் கூட்டாக இணைந்து உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சவால்கள் மற்றும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வளித்தல் தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக உங்களது அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள கரிசனைக்குரிய விடயங்கள் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஏற்கனவே உங்களுடைய அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளரின் அறிக்கையிலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்களை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் எவையென்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை அர்த்தமுள்ளவகையிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் திருத்தியமைப்பதற்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அத்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இல்லாவிடின் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகப் புதியதொரு சட்டத்தைத் தயாரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு உங்களது அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சியைப் பாராட்டும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் நாம் ஏற்கனவே வெளிப்படுத்திய கரிசனைகளைத் தற்போதைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பிலும் முன்வைக்கின்றோம்.

எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதாயின், அச்சட்டம் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகதாகக் காணப்படும் அதேவேளை தீவிர மனித உரிமை மீறல்கள், போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மீதான முடக்கம், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் என்பவற்றுக்கு வழிவகுத்த முன்னைய பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கூறுகள் நீக்கப்பட்டோ அல்லது மறுசீரமைக்கப்பட்டோ இருப்பது அவசியமாகும்.

இருப்பினும் இத்தேவைப்பாடுகளை உரியவாறு பூர்த்திசெய்யாமல் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதன் மூலம் பயங்கரவாதத்தை செயற்திறன்மிக்கவகையில் கட்டுப்படுத்தமுடியாது எனும் அதேவேளை, எதிர்வருங்காலங்களில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரிப்பதையும் தடுக்கமுடியாது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அர்த்தமுள்ள மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை உங்களது அரசாங்கத்திடம் மீளவலியுறுத்துகின்றோம். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் பிரகாரம் நீதிமன்ற மேற்பார்வை மற்றும் உரியவாறான நடைமுறைகளின் செயற்திறனற்ற தன்மை என்பன இச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். எனவே கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த சரத்துக்கள் இல்லாத ஆக்கபூர்வமான சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.