நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என அறியமுடிவதுடன், எதிர்வரும் தினங்களில் அச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய எதிர்ப்பலை தோற்றம்பெற்றுள்ள நிலையில், அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இம்மாத இறுதி வாரம் வரை தாமதிக்கப்போவதாகக் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
அதன்படி அச்சட்டமூலமானது 25 ஆம் திகதி அல்லது 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அச்சட்டமூல சமர்ப்பணம் தொடர்பில் இன்று (24) திங்கட்கிழமை மாலை 4 மணிவரை ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார்.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறாது என இன்றைய தினம் (24) தமக்கு அறிவிக்கப்பட்டதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இருப்பினும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் 25 ஆம் திகதி அல்லது 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றே அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்ததாகவும், அத்தீர்மானத்தில் மாற்றம் இடம்பெற்றிருப்பின், அதுகுறித்துத் தாம் அறியவில்லை எனவும் நீதியமைச்சரின் ஊடகப்பிரிவு கேசரியிடம் தெரிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துக் கேட்டறியும் நோக்கில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை பலமுறை தொடர்புகொள்ள முற்பட்ட போதிலும், அவரைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.