ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 2

அதன் படி நியூரம்பேர்க் இராணுவத் தீர்ப்பாயம் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்”  தொடர்பாகப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியது.

‘அரசியல், இன அல்லது சமயக்குழுக்களின் மீது மேற்கொள்ளப்படும் கொலை, அடிமைப்படுத்துதல், நாடு கடத்துதல் மற்றும் விடாத்துயரளித்தல் ஆகியவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” என வரையறை செய்யப்பட்டது.

disappeared family 11 ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் - பாகம் 2இவ் வரையறுப்பானது மேலும் புத்தாக்கப்படவேண்டும் என அடுத்து வந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மீள்பார்வைகள் வலியுறுத்தின. ஏனெனில் உள்நாட்டுச் சட்டங்களில் மேற்சொல்லப்படும் குற்றங்கள் தண்டனைக்குரியவையாக இல்லாதிருந்தால் அந்நாடு எவ்வாறு அக்குற்றங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் அரசொன்று இவ்வாறான குற்றங்களைத் தனது மக்களின் மீது நிகழ்த்தினால் அவ் அரசைத் தவிர்த்து விடலாமா? என்பதும் மிக முக்கியமான மீள்பார்வைகளாக இம் முதலாவது வரைவிலக்கணத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களாக இருந்தது.

பன்னாட்டுக் குற்றங்களை வரையறை செய்யும் பணியைத் தொடர்ந்த ரோம் பன்னாட்டு நடைமுறை வரைபு தன்; அகவிதி 7 இன் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவை:

“பல்வேறுவகையான நடவடிக்கைகள் ஊடாக யாராயினும் சாதாரண குடிமக்கள் மீது நன்றாகத் தெரிந்து கொண்டே பரவலாகத் தாக்குவது அல்லது திட்டமிட்டவகையில் குறித்துத் தாக்குவது” என வரையறுத்தது. அவ்வரைபில் பின்வரும் குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரானவையாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 1. கொலை
 2. நிர்மூலமாக்குதல்
 3. அடிமைகளாக்குதல்
 4. பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளவற்றை மீறும் வகையில் சிறையிலிடுதல் மற்றும் தனது உடலின் மீது தனக்கிருக்கும் சுதந்திரத்தை இழக்கச்செய்து வாட்டுதல்.
 5. பொதுமக்களை வலிந்து இடம் பெயர்த்தல் அல்லது நாடு கடத்துதல்
 6. சித்திரவதை
 7. வன்புணர்வு, பாலியலடிமையாக்குதல், கட்டாயப்படுத்தி விபசாரத்திற்கு தள்ளுதல், கட்டாயக் கருவேற்றல், கட்டாயக் கருவழிப்பு உட்பட அவற்றிற்குச்சமனான பாலியற் கொடுமைகள்.
 8. அடையாளங்காணத்தக்க அல்லது அரசியல் கொள்கையினால் இணைந்த இனமொன்றாக, தேசத்தவராக, குலத்தினராக, கலாசாரப் பிரிவினராக, சமயப் பிரவினராக, ஒரு பாலினத்தவராக அல்லது வேறுயாதாயினும் அடிப்படையில் கூட்டாக அடையாளங்காணத்தக்கவரின்; மீது சட்ட பரிபாலனத்தின் கீழ் குற்றமாக கருதப்படுவதும், பன்னாட்டுச் சட்டப்படி அனுமதிக்கபபடாததுமான குற்றங்களை தொடர்ந்து இழைத்து அவர்களுக்கு விடாத்துயரளித்தல்.
 9. வலிந்து காணாமலாக்குதல்
 10. நிறவெறி நடவடிக்கைகள்
 11. கடுந்துன்பத்தை மனதிற்கிழைக்கும் நடவடிக்கைகள் அல்லது பெருவலியை உடலுக்கோ மனதிற்கோ இழைக்கும் மிருகத்தனமான நடவடிக்கைகள்

ஆகியவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் வகைகளாகக் கூறப்பட்டுள்ளன.

Trinco disap ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் - பாகம் 2உலகில் சட்டங்களை உருவாக்கும் பொறிமுறையானது மூன்று வழிகளின் ஊடாக நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். அவை முறையே

 1. அந்நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் சபைகள் அதாவது நாடாளுமன்றங்கள்
 2. வழக்காறு என்று சொல்லப்படும் நாம் காலாதிகாலமாகப் பின்பற்றிவரும் பழக்கங்கள் (ஈழத்தைப் பொறுத்தவரை கண்டியச் சட்டம், வடமாகாணத்திற்குரிய ஆதனச் சட்டம் போன்றவை)
 3. முற்தீர்ப்புகள் எனப்படும் உயர்நீதிமன்றங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியவாய்ந்த நீதிமன்றங்களின் தீர்ப்புகள்

என்பவை ஊடாகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

அவ்வாறே பன்னாட்டுக்குற்றங்கள் தொடர்பான மிக அண்மைய வரைவிலக்கணங்களை உருவாக்கிச் சட்டமாக்கிய இரண்டு பன்னாட்டுத் தீர்ப்பாயங்கள் (முற்தீர்ப்புகள்) வரலாற்றில் பதிவாகியுள்ளன. அவை முறையே:

 1. ருவாண்டாவிற்கான பன்னாட்டுத் தீர்ப்பாயம்
 2. மேனாள் யூகோஸ்லாவியாவிற்கான பன்னாட்டுத் தீர்ப்பாயம்

அதன்படி ருவாண்டாவிற்கான பன்னாட்டுத் தீர்ப்பாயம் தனது அகவிதி 3 – மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் – இன் கீழ் பின்வரும் குற்றங்கள் தண்டனைக்குரியவை எனச் சட்டமாக்கியது.

 1. கொலை.
 2. அழித்தொழிப்பு.
 3. அடிமையாக்குதல்.
 4. நாடு கடத்துதல்.
 5. சிறையிடுதல்.
 6. சித்திரவதை.
 7. வன்புணர்வு.
 8. இன, மத, அரசியல் காரணங்களுக்காகதுன்புறுத்துதல்.
 9. ஏனைய மனிதாபிமானமில்லாச் செயல்கள்.
 10. மரணத்தைத் தரத்தக்க கொடுஞ்சித்திரவதைகள் மற்றும் சிதைத்தல்கள் போன்ற கொடுமைகளின் ஊடாக உயிர், உடல், உள மற்றும் தேகாரோக்கியத்தின் மீது தொடுக்கப் படும் வன்முறைகள்.
 11. கூட்டாக வழங்கப்படும் தண்டனைகள்.
 12. பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருத்தல்.
 13. பயங்கரவாத நடவடிக்கைகள்.
 14. வன்புணர்தல், வலுக்கட்டாயமாக்கி விபச்சாரத்தை திணித்தல் போன்ற கீழ்த்தரமான கண்ணியக்குறைவான செயல்கள் ஊடாக தனிமனிதப் பெறுமதிகளை அழித்தல்.
 15. கொள்ளையடித்தல் .
 16. நாளாந்தம் கூடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீதிமன்றினாலன்றி சாதாரண மனிதருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்ட உறுதிப்பாடுகளை தவிர்த்து ஏனைய வகைகளில் சிறையிடுதல் மற்றும் மரணதண்டனைக்கு உள்ளாக்குதல்.
 17. மேற்தரப்பட்டுள்ள எச்செயலையும் புரியப்போவதாக பயமுறுத்துதல்.

எனவே இப்பொழுது நீங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எவை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவை எமது தமிழ்த்தேசத்தில் நிகழ்த்தப்பட்டதா என்பதை நாங்கள் நோக்குவோமாயின் அதற்கான பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களுடன் அடுத்தவாரம் சந்திப்போம்

முனைவர் ஸ்ரீஞானேஸ்வன் பன்னாட்டுக் குற்றங்கள் பொத்தக ஆசிரியர், பட்டய முகாமைக் கணக்காளர்