ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 1

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட காலம் முதல் ஸ்ரீலங்காவைச் சிங்களப் பேரினவாதம் தனது தீராப்பசிக்குள் வீழ்த்தியது. அப்பேரினவாதச் சிநதனையை ஏனைய எந்த சக்திகளும் அழித்துவிடக் கூடாது என்பதைக் கணக்கிலெடுத்து பௌத்த தேசியவாதத்தினை தனது முகமாக்கிக் கொண்டது. அதன்பாற்பட்டு ஸ்ரீலங்காவில் நிறைவேற்றப்பட்ட இரண்டு அரசியலமைப்புக்களிலும் பௌத்த தேசியவாதம் முதன்மை பெற்றதுடன் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற கோசத்தில் இன்று வரை சிங்கள நாசியிசம் இயங்குவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதை நாம் காண்கின்றோம்.

srilanka war crime ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் - பாகம் 1இந்த சிங்கள நாசியிசத்தின் பசிக்குள் தமிழ் மக்கள் இரையாகிவிடக்கூடாது என்பதற்காக உருவாகிய தற்காப்பு ஆயுதப் போர் பல்நாட்டுப் பொருளாதார நன்மைகளுக்கும் பூகோளப் போட்டிக்குள்ளும் சிக்கவைக்கப்பட்டது. எனினும் என்றும் தமது சுயநிர்ணய உரிமையினைத் தமிழர்கள் தாரைவார்க்கமாட்டார்கள் என்பதை ஸ்ரீலங்காவும் பன்னாட்டு வல்லரசுச் சக்திகளும் மிகச் சரியாக விளங்கிக்கொண்டன. அதன் ஒரு வெளிப்பாடாக 1997 செம்டெம்பர் 10ஆம் திகதி விடுதலைப் புலிகள் திருகோணமலையிலுள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இல்மனைட் கனியத்தை ஏற்றியிருந்த கப்பலைத் தாக்கியதை நாம் நினைவிற்கொள்ளலாம்.

திருகோணமலை என்பது பூகோள ஒழுங்கில் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மிகச்சரியாகப் புரிந்துகொண்ட வல்லரசுகள் சுயநிர்ணய உரிமையைத் தாரைவார்க்காத தமிழர்களையும் அவர்களின் தற்காப்புச் சேனையையும் அழித்தொழிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதைக் கணக்கிலெடுத்திருந்தனர் என்பதை நாம் ஒரு நிகழ்வின் ஊடாக அறியலாம். அந்நிகழ்வானது வோசிங்டன் நிகழ்வு என வரலாற்றில் பதியப்பட்டது.

ஏப்ரல் 2003 இல், ஆறு சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்த நிலையில் எதிர்பாராத அறிவிப்பொன்று வோஸிங்டனில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டது. அதாவது ஒக்டோபர் 8, 1997 இல் இருந்து பன்னாட்டுப் பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகளை அமெரிக்கா பட்டியலிட்டிருந்ததால் அவர்கள் சமாதானப் பேச்சுக்களில் ஒரு தரப்பாகப் பங்கேற்ற முடியாது என அறிவித்தது.

இவ் அமெரிக்க அறிவிப்பு சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்றிய தரப்புகளுக்கிடையே சமநிலையை பாதித்ததால் சமாதானப் பேச்சுக்களில் சரிவை ஏற்படுத்தும் ஓர் அறிவிப்பாகியது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டதால் ஒட்டுமொத்த அமைதிப் பேச்சுக்களும் தடைப்பட்டன.

ஈழத்தமிழருக்கு சமாதானத்தின் ஊடாக ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் நோக்கில் நடாத்தப்பட்ட சமாதானப் பேச்சுக்களை குழப்ப அமெரிக்க பிரித்தானிய ஐரோப்பிய சக்திகள் விரும்பியதன் பின்னணி என்ன?

sambanthan ltte 07 ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் - பாகம் 1சமாதானப் பேச்சுக்கள் வெற்றியடையும் பட்சத்தில் தமிழர்களின் ஆயுதப்போராட்ட வலு சற்றும் குறையாமல் பாதுகாக்கப்பட்டு விடுவதுடன் தமிழர் தாயகத்தின் இறையாண்மையை அச் சக்தி மறைமுகமாகப் பாதுகாத்து நிற்கும் என்பதைப் புரிந்துகொண்ட வல்லரசுச் சக்திகள் இராணுவத் தீர்வின் ஊடாக தமிழர்கயின் ஆயுதப் போராட்ட வலுவையும் அதற்கு ஆதரவாயிருக்கும் மக்கள் சக்தியையும் அழித்தொழித்துவிட வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துக்கொண்டன.

தமது பன்னாட்டு வழங்கல் செயற்பாட்டிலிருந்த கப்பல்கள் அடுத்தடுத்து அடையாளங்காணப்பட்டு அழிக்கப்பட்ட போது இந்த விடயத்தை விடுதலைப் புலிகளும் மிகச்சரியாகக் கணித்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது.

நந்திக்கடல் நோக்கி நகர்ந்த தமிழினத்தின் போரியல் வலு 2009இல் மாபெரும் கூட்டுக்கொலைகளின் ஊடாக அழிக்கப்பட்டதை உலகம்  தனது வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்தது. எனினும் தமிழினத்தின் மீதான பன்னாட்டுக் குற்றங்கள் கட்டமைக்கப்பட்டு சுதந்திரத்தின் பின்னர் காலாதிகாலமாக நிகழ்த்தப்பட்டவை என்பதை தமிழர்களே உணரமுடியாததற்குக் காரணம் பன்னாட்டுக் குற்றங்கள் எவை என்பதை தமிழர்கள் கற்றுத் தேராமல் இருப்பதே.

பன்னாட்டுக் குற்றங்களைப் பற்றிப் பேசும் வகையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

ICC ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் - பாகம் 1பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம் மற்றும் பன்னாட்டு மனிதஉரிமைச் சட்டங்களின் சரத்துக்களை மீறும் எந்தவொரு செயலும் பன்னாட்டுக் குற்றமாகும்.

“பன்னாட்டுச் சட்டத்தினை மீறுகின்ற குற்றத்தினை புரிந்தவரின் மீது பன்னாட்டு சட்டத்தினைப் பிரயோகித்து குற்றவியல் பொறுப்பை நேரடியாக சுமத்தமுடியுமாயின் அச்செயல் பன்னாட்டுக் குற்றம்’’ என தகைசார் பேராசிரியரும் கொசோவா விசேட அமர்;வு நீதிபதியுமான கினியல் மெட்டராஸ் கூறுகின்றார். (பன்னாட்டுக் குற்றங்கள், பக்கம் 23)

உலகத்தில் வாழும் சமூகங்களிடையே நிகழ்த்தப்படும் அதி முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்கள் தொடர்பாகவே “பன்னாட்டுக் குற்றவியல் சட்டம்” தனது பங்களிப்பை நல்கின்றது என ஓப்பின் சொசைட்டி பௌண்டேசன் என்ற அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே எவை அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த குற்றங்கள் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

அதனை வரையறையும் முயற்சியொன்று 19 ஆம் நூற்றாண்டில் உலகில் முதன் முதலாக ஆரம்பமானது.

இவ் அதிமுக்கியத்துவம் வாய்ந்த குற்றங்களை வரையறை செய்யும் முயற்சி 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பமானது. போர்க்களத்தில் படையினர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை வரையறை செய்த “ஹேக் பன்னாட்டு நடைமுறை வரைபு” முயற்சியினை அம் முதலாவது முயற்சியாக குறிப்பிடலாம்.

இதன் பின்னரே பன்னாட்டுக் குற்றங்களை வரையறை செய்யும் முயற்சிகள் முழு முனைப்பாக நிகழத் தொடங்கின. அம் முயற்சிகளின் பயனாக பன்னாட்டுக் குற்றச் சட்டமானது ஆரம்பத்தில் மூன்று குற்றங்களை பன்னாட்டுக் குற்றங்களாக வரையறுத்தது. அவையாவன:

  1. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
  2. போர்க்குற்றங்கள்
  3. இனப்படுகொலை

பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த மீளாய்வுகளில் இம்மூன்ற குற்றங்களுடன் ஆக்கிரமிப்பு ஓர் குற்றமாக இணைக்கப்பட்டு இன்று உலகில் பன்னாட்டுக் குற்றங்கள் என்பவை நான்காகப் பரிமளித்துள்ளன.

  1. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் :

உலகில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் தோற்றுவாயாக ஆர்மேனியாவில் ஓட்டோமான் பேரரசால் தனது மக்களையே படுகொலை செய்த நிகழ்வு பதிவாகியுள்ளது. என்றாலும் சுமார் பதினைந்து இலட்சம் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்ட அந்த நிகழ்வு நிகழ்ந்த முதலாம் உலக மகா யுத்த காலப்பகுதியான 1900களின் ஆரம்பப் பகுதியில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட எந்தவொரு குற்றமும் பன்னாட்டுக் குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்போது இரண்டாம் உலக யுத்தமும் நிறைவு பெற்றுவிட்டது.  நவம்பர் 1945இல் இரண்டாம் உலகப்போரின் போது நாஸிப் படைகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவென நியூரம்பேர்க் இராணுவத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. அத்தீர்ப்பாயத்தின் முன் ஆர்மேனியப் படுகொலைகள் தொடர்பாகவும் விசாரணைகளை நிகழ்த்துமாறு கேட்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் நிகழ்த்தப்பட்ட இராணுவக் குற்றங்களை ஆராய நியமிக்கப்பட்ட நியூரம்பேர்க் இராணுவத் தீர்ப்பாயம் அப்போரில் நிகழ்த்தப்படாத ஆர்மேனியப் படுகொலைகளை விசாரணைக்குட்படுத்த வேண்டுமாயின் போரில் நிகழாத அப்படுகொலைகளுக்கு ஒரு பெயரையும் அதற்கொரு வியாக்கியானத்தையும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்தது. அதன்படி இத்தீர்ப்பாயமே “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்றால் எவ்வாறு வரையறுத்துக்கொள்ள வேண்டும்; என்பதனை முதன்முதலில் வியாக்கியானித்தது.

முனைவர் ஸ்ரீஞானேஸ்வன் 

பன்னாட்டுக் குற்றங்கள் பொத்தக ஆசிரியர், பட்டய முகாமைக் கணக்காளர்

போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களுடன் அடுத்தவாரம் சந்திப்போம்