சட்ட மன்றத் தேர்தலில் திமுக வெற்றி :’ஈழத் தமிழர் பிரச்சினைகளில் கரிசனை கொள்ள வேண்டும்’ – ஈ.சரவணபவன்

தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றியீட்டி தமிழகத்தின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எமது வாழ்த்துக்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஈழத் தமிழர் விடயத்திலும், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் அவா என்றும் தெரிவித்துள்ளார் ஈ.சரவணபவன்.

தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றியீட்டியுள்ளது. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஈ.சரவணபவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சார்ப்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதிதாக தமிழகத்தில் உதித்துள்ள ஆட்சி ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளில் ஆத்மார்த்தமாகச் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம், அவாக் கொண்டுள்ளோம்.

தேர்தல் காலங்களில் ஈழத் தமிழர் பிரச்சினை தமிழக கட்சிகளால் அதிகம் பேசப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும் ஈழத் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசியிருந்தது. எதிர்காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உரிய சந்தர்ப்பங்களில் அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும் என்றும் அன்புரிமையோடு கோருகின்றோம்” என்றுள்ளது.