கனேடிய பராளுமன்ற உறுப்பினரான கார்னட் (Garnett) அவர்கள் தமிழ் மக்களை 10.04.2019 அன்று சந்தித்து கலந்துரையாடினார். Sherwood Park—Fort Saskatchewan தொகுதியில் வாக்கு கேட்கும் சந்தர்ப்பத்தில் ஈழத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்காக குரல் கொடுத்தார். இந்தத் தொகுதியில் தமிழர்கள் எவரும் இல்லாத போதும், தனக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது எனத் தெரிந்திருந்தும் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்த இளம் பாராளுமன்ற உறுப்பினராக இவர் திகழ்கின்றார்.
இவரின் இந்த செயற்பாட்டிற்காக தமிழ் மக்களால் நன்றியோடு போற்றப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கால பிரச்சாரத்தின் போது, தமிழ் மக்களை சந்தித்து சுமார் இரண்டு மணிநேரம் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் தமிழர்களின் கேள்விகளுக்கு அன்போடும், பண்போடும், பொறுமையுடனும், நட்புணர்வுடனும், நம்பிக்கையூட்டும் வகையிலும் பதிலளித்தார். இதன் மூலம் அவர் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அவர்களின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை அரசிற்கு வலிமையான அழுத்தத்தைக் கொடுக்கும் என நம்பும் தமிழ் மக்கள், தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை குறித்து கனேடிய பொறிமுறைகள் உருவாக்கப்படுமா என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தது.
ஏற்கனவே பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தவர் என்ற வகையில் அவரது பதில்கள் தமிழ் மக்களுக்கு ஆறுதலைக் கடந்து நம்பிக்கையையும் ஊட்டியது.
கனடிய தமிழர்கள் கட்சி சார்ந்தவர்களாக இல்லாமல் இனம் சார்ந்த சிந்தனையோடு இங்கு கூடி இருக்கின்றார்கள் என்பதை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்கள் அவருக்கு புரிய வைத்த போது தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்து புரிதலோடு வழங்கிய பதிகள் பாராட்டிற்குரியவை.
நல்ல மாந்தர்கள் எல்லா இனமக்களுக்குள்ளும் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த இளைய வெள்ளையின பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்கள் நண்பருமான கார்னெட் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
இவரை முன்னுதாரணமாகக் கொண்டு கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டும் நீதியாளர்களாக மாறி தமிழர்கள் உள்ளங்களை நம்பிக்கையால் நிறைத்து கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.