ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு

ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமெனப் போராடியமை வரலாறு. ஆனால் 17.05.1946 இல் பிரித்தானிய ஆட்சிக்குழு ஆணையகம் இலங்கைக்கான புதிய அரசியலமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்காது, தங்களது காலனித்துவ ஆட்சிக்குப் பதிலாகச் சிங்களக் காலனித்துவ ஆட்சி ஒன்றை ஈழத்தமிழர்கள் மேல் தோற்றுவித்தது. ஈழத்தமிழர்களுக்கு இந்தச் சிங்கள காலனித்துவம் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்பட்டதன் 75ஆவது ஆண்டு 2021இல் தொடங்குகின்றது.

இவ்வேளையில் ஈழத்தமிழர் பிரச்சினையை காலனித்துவத்தில் இருந்து விடுதலை அளிப்பதற்குரிய அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் எடுத்து நோக்க வேண்டும் என்பது பலமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

இதனை விடுத்து ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே எடுத்து நோக்கும் உலக வழமையே 1956 முதல் இன்றுவரை 65 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனஅழிப்புக்கு உள்ளாக்கி வருவதற்கான மூல காரணமாகிறது.

இதன் தொடர்ச்சியாகவே ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களின் இருப்பைக் குலைக்கும் இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்புச் செயற்பாடுகள் என்பவற்றைச் செய்கிறது.

இந்த இனஅழிப்பைச் சிறீலங்கா நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ற பெயரில் நியாயப்படுத்தி ஈழத்தமிழரின் செயற்பாட்டைப் பயங்கரவாதமென திரிபுவாதம் செய்து வருகிறது. இவ்வாறு அரசு என்னும் தகுதியைத் தனது சர்வாதிகார அரசுக்கு நிலைநாட்டிக் கொள்ளும் சிறீலங்கா, தனது இனஅழிப்புக்குத் தடையாக உள்ளனவற்றை நீக்கிட இன்றைய அரசியலமைப்பை முழுதாக மாற்றிப் புதிய அரசியலமைப்பையும் விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த புதிய அரசியலமைப்பின் நோக்கம் வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத்தீவில் வரலாற்றுத் தாயகத்தையும் தன்னாட்சி உரிமையையும் தேசியத் தன்மையையும் உடைய ஈழத்தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மறுத்து, சிறீலங்கா என்னும் நாடு சிங்கள இனத்தவருக்கும், பௌத்த மதத்தவருக்குமே இறைமையும், தன்னாதிக்கமும் உடைய நாடு என நிலைநிறுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் மானிடவியல், தொல்லியல், சமூகவியல் தொன்மையைத் தொடர்ச்சியை படைபலப் பின்னணியில் அழிப்பதைப் பௌத்தத்தின் தொன்மையை தமிழர் தாயகங்களில் மீள்நிறுவுதலுக்கான புனிதச் செயற்திட்டமாக 2020 முதல் சிறீலங்கா முன்னெடுக்கத் தொடங்கி, சைவத் திருத்தலங்களில் எல்லாம் முன்னால் பௌத்த விகாரையையும் அமைக்கும் மதச்சுதந்திர மறுப்பையும் தொடங்கியுள்ளது.

இந்நேரத்தில் இன்றைய ஈழத்தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சிறீலங்காப் பாராளுமன்றத்துள்ளும், வெளியிலும் ஈழத்தமிழர்களின் இறைமையும், தன்னாதிக்கமும் கவனத்தில் எடுக்கப்பட்டு ஆட்சிமுறை மாற்றங்கள் அமைய வேண்டும் என்னும் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்து வருகின்றார்.

இந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இவரின் தந்தைவழிப் பேரனும், ஈழத்தமிழ்த் தலைவர்களுள் முக்கியமானவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக விளங்கியவருமான அமரர்  ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் 03.11.1945 அன்று அன்றைய காலனித்துவச் செயலகத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கை அமைகிறது,  பிரித்தானியாவின் இந்திய அலுவலகப் பதிவு CO 54/987/1, No 96 இலக்கப் பதிவில் இன்றும் காணக்கூடிய  அந்த அறிக்கை அரசியல் நிர்ணயசபை ஒன்றைத் தமிழர்களையும் உள்ளடக்கி அமையாமல் விட்டமையே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு மூலகாரணமெனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இவ் அறிக்கையைத் தொடர்ந்து 15.01.1946ஆம் திகதி  அன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் எஸ் சிவசுப்பிரமணியம் அவர்கள் காலனித்துவ செயலகத்திற்கு அனுப்பிய CO 54/986/ 9. No9ஆம் இலக்க அறிக்கை ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினமல்ல தேசஇனம் என்பதைத் தெளிவாக பிரித்தானிய காலனித்துவ அரசிடம் வலியுறுத்தியது.

இவ்வுண்மைகளின் அடிப்படையில், ஈழத்தமிழர் தங்களைத் தேச இனமாகப் பிரித்தானியாவுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டில் ஈழத்தமிழர்கள் காலெடுத்து வைக்கும் இந்நேரத்தில், தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் இனத்துவத்தைச் சிறுபான்மையினமல்ல, ஈழத்துத் தேச இனம் என்ற உரிமை கோரலுடன் வெளிப்படுத்துவதன் மூலமே சிறீலங்காவின் ஒரு இனம் ஒரு மதச் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஈழத்தமிழர் உரிமைகளை 2021இல் நிலைநாட்டலாம் என்பதே இலக்கின் கருத்தாக அமைகிறது.