ஈழத்தமிழர்கள் வெளியக தன்னாட்சியுரிமையை நடைமுறைப்படுத்தலுக்கான காலம் ஆரம்பம்

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையின் 23.03.2021ஆம் திகதிய சிறீலங்காவில் மனித உரிமைகளின் நிலை குறித்த 46/1 இலக்கத் தீர்மானம் முன்னோக்கிய நகர்வுக்கான முக்கியமான படி.  சிறீலங்காவின் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு நீதிக்காக நீண்ட காலமாக ஏங்கிக் கிடப்பவர்களுடைய நம்பிக்கையை மீளவும் புதுப்பிக்கின்றது” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி கில்லரி பவர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் “இத்தீர்மானம் சிறீலங்காவில் மனித உரிமைகள் குறித்த அனைத்துலகின் கண்காணிப்பிலும், மீளாய்விலும் உள்ள சாய்வுகளை நிமிர்த்துவது மட்டுமல்லாமல், அனைத்துலக சமுதாயம் நீதியையும், பொறுப்புக் கூறலையும் ஏற்படுத்துவதற்கான எதிர்கால விசாரணைகளையும், விதந்துரைகளையும் முன்னெடுப்பதற்கான படிகளை உருவாக்குவதற்கான சாட்சியங்களைத் திரட்டுவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், அழிந்து போகாது பாதுகாப்பதற்குமான ஆணையை, மனித உரிமைகள் அவைக்கு வழங்கியுள்ளது.

மனித உரிமைகள் அவைக்கான இந்த முக்கிய நகர்வு  அனைத்துலக அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக தேசிய மட்டத்தில் சிறீலங்கா நீதியைப் பின்பற்ற வேண்டுமென அளித்த ஆதரவுகளும், ஊக்கங்களும் எந்தவித பயனையும் அளிக்கவில்லை. இந்தத் தீர்மானம் கடந்த காலத்திலும், சமகாலத்திலும் குற்றங்களைச் செய்த – செய்கிற குற்றவாளிகளுக்கு அவர்கள் தொடர்ந்தும் தண்டிக்கப்படாது செயல்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தியைத் தெளிவாக வழங்கியுள்ளது. இந்த முக்கிய தீர்மானம் அதன் முதற்படியாக, அனைத்துலக நீதிமுறை விசாரணைகளுக்கும், சாத்தியப்படக்கூடிய அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கும், சிறீலங்காவை விதந்துரைப்பதற்குமான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மற்றைய உறுப்பு நாடுகளுக்கு கண்காணிப்புக்களை மேற்கொள்ளவும் நம்பிக்கை கொடுத்துள்ளது.

பாதிப்படைந்தவர்கள் தேசிய மட்டத்தில், நீதியை அணுகுவதற்கு ஏற்படுத்தப்பட்ட மலைபோன்ற தடைகளும், அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்திற்கு இருந்த விருப்பமின்மை, இயலாமை என்பனவும் இந்தத் தீர்மானத்தை எடுக்க வைத்துள்ளது. இந்தத் தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளரதும், அனைத்துலக மன்னிப்புச் சபையினதும், சிறீலங்காவின் குற்றவரலாறு குறித்த பெரும் குற்றச்சாட்டு அறிக்கைகளிதும், சமகால மனித உரிமைகள், சீர்கேடுகள் குறித்த எச்சரிக்கைகளினதும் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. தீர்மானம் ஜெனிவாவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், சிறீலங்கா வெற்று மறுப்புக்களை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புக்களின் சட்டபூர்வத்தன்மையை மறுத்தது.

அதே வேளை இலங்கையில் சிறுபான்மையினத்தவரைக் குறிவைக்கும் புதிய ஒழுங்குமுறைகளை அதிகாரிகள் நிறைவேற்றி, மனிதஉரிமைகள் அவையினதும் மனித உரிமைகள் அமைப்புக்களினதும் கவலைகளும் அக்கறையும் சரியென்பதை நிரூபித்துள்ளனர். நாங்கள் சிறீலங்காவை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய அணுகுமுறைகளுக்கு தடங்கலற்ற   உறுதியான கட்டமைப்புக்களைக் கட்டியெழுப்புமாறு சிறீலங்காவை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். இதனைச் செய்யத் தவறினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை சுதந்திரமான முறையில் பொறுப்புக் கூறலைச் செய்ய வைக்கும் பொறிமுறைகளை வலுவான நடவடிக்கைகள் மூலம் உருவாக்க வேண்டி வரும்” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி கில்லரி பவர்  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையுமே மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பும் தெரிவித்துள்ளது. இவ்விரு மனித உரிமைகள் அமைப்பும் ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமையினை சிறீலங்கா மறுத்து வருவதையும், அவர்களுக்கான பாதுகாப்பையும், அமைதியையும், வளர்ச்சிகளையும் அளிக்க மறுப்பதையும் மறைமுகமாகத் தெளிவுபடுத்தியுள்ளன.

இவ்வாறு ஒரு நாட்டிற்குள் அந்த நாட்டுக்கான அரசு தன் குடிமக்களாக உள்ள தேசமக்கள் தங்கள் உள்ளக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில்  தங்களை ஆள்வதற்காக ஏற்படுத்திய ஒப்பந்தத்தை மீறும் பொழுது, அம்மக்கள் தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக நாடுகளிடமும், அனைத்துலக அமைப்புக்களிடமும் தங்களைக் காப்பாற்றுமாறு கோரலாம் என்பது அனைத்துலகச் சட்டம். அதன் அடிப்படையில் கடந்த பன்னிரு ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் விடுத்த கோரிக்கைக்குப் பதிலாக இவ்வாண்டு பன்னிருவரை அலுவலகர்களாகக்  கொண்ட அனைத்துலகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அது சிறீலங்காவில் இடம்பெற்ற – பெறுகிற அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அனைத்துலக நீதிமுறைமைகளையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளையும் முன்னெடுப்பதற்கான போதிய சாட்சியங்களைத் திரட்டுவதற்கான ஆணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களின் வெளியக உரிமையை அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கான புதிய வாயிலை உருவாக்கியுள்ளது.

வேறு மொழியில் கூறினால் சிறீலங்கா ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாததான  உள்ளக தன்னாட்சி உரிமையினை செயற்படுத்தத் தவறின் அவர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சிறீலங்காவின் இறைமையை மீறிய அனைத்துலகச் செயற்பாடுகள் சட்டபூர்வமானதாக மாறும். இதனை ஈழத்தமிழர்கள் ஒற்றுமையுடனும், பொறுப்புணர்வுடனும் எதிர்கொண்டு உண்மைகளை நிரூபிப்பதற்கான சாட்சியங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்குக் கிடைக்கச் செய்வதற்கு முழு அளவில் தனிமனித விருப்பு வெறுப்புக்களை விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கோருதல் என்ற மேலான உணர்வுடன்  அனைத்து ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களின் நாடுகளுடனும் உறவுகளைக் கட்டி எழுப்பி வேகமாகச் செயற்பட்டாலே இந்த அனைத்துலகச் செயல்முறை ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீள்விக்கும் என்பதே இலக்கின் கருத்து.