காஸாவில் மீண்டும் ஒரு போர் தொடங்கி, ஏற்கனவே இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இஸ்ரேல் படைகள் இடைவிடாது மேற்கொண்டுவரும் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் காரணமாக 7000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இறந்திருக்கிறார்கள். அதே நேரம், தென் இஸ்ரேலில் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீன எதிர்ப்புக்குழு மேற்கொண்ட தாக்குதல்களில் 1400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நடந்துகொண்டிருக்கும் போர் தொடர்பாக மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டுவருகின்ற செய்திகளை அவதானிக்கும் போது, இருதரப்பிலும் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் விடயம் மாறுபாடான விதங்களில் அணுகப்படுவதை என்னால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஹமாசினால் இஸ்ரேல் மக்கள் குரூரமாகக் கொல்லப்பட்டதில் எல்லா அறநெறிக்கோட்பாடுகளையும் ஹமாஸ் போராளிகள் மீறியதாகச் சுட்டிக்காட்டும் மேற்குலக ஊடகங்கள், சமகாலத்தில், காஸாப் பிரதேசத்தில் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் ஈனஇரக்கமற்ற குண்டுத்தாக்குதல்களின் கோரத்தன்மையையும் அங்கே அறநெறிக்கோட்பாடுகள் மீறப்படுவதையும் சுட்டிக்காட்ட மறுக்கின்றன.
அண்மையில் பிபிசியின் இரவுச் செய்தி நிகழ்ச்சி ஒன்றில், ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள பாலஸ்தீனத் தூதரகத்தின் தலைமைப் பதவியை வகிக்கின்ற ஹ_சம் ஸொம்லொட் எவ்வாறு இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு அங்கத்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை விவரித்தார். அந்த நேரத்தில் பெயருக்காக அநுதாபம் தெரிவித்த பிபிசி செய்தியாளர், “இஸ்ரேலில் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று உடனடியாகவே தெரிவித்தார்.
தூதரக அதிகாரியான ஸொம்லொட், ஹமாஸ் இழைத்த அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்காக தனது இழப்பையும் துன்பத்தையும் எடுத்துச்சொல்லவில்லை. அதற்கு மாறாக அவரிடம் நேரடியாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது தான் தனது தனிப்பட்ட அனுபவம் பற்றி எடுத்துச் சொன்னார். அவ்வாறு அவர் பதிலளித்த நேரத்தில் அவரது உறவினர்களைக் கொன்றவர்கள் மீது கண்டனம் தெரிவிக்காமல் ஏனையோரைக் கொன்றவர்களைக் கண்டனம் செய்யும் வண்ணம் அவர் கேட்கப்பட்டார்.
அதே நேரம் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தமது உறவுகளைத் தாக்குதல்களில் இழந்த இஸ்ரேல் மக்களுடன் செவ்விகள் மேற்கொள்ளப்பட்ட போது, அவர்களது அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்றோ அல்லது, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலன்ட், பாலஸ்தீனர்கள் ‘மனித மிருகங்கள்’ என்று விவரித்தது பற்றியோ எந்தவிதமான கேள்வியையும் எழுப்பியதை எந்தவொரு செவ்வியிலும் என்னால் பார்க்க முடியவில்லை.
இஸ்ரேலின் அணுகுமுறைக்கு முற்றிலும் எதிராக, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பைப் பற்றியோ அல்லது காஸாவிலிருந்து அப்பாவிப்பொதுமக்கள் முற்றுமுழுதாக வெளியேற்றப்படுவது பற்றியோ எந்தவிதத்திலும் கண்டனம் தெரிவிக்கும் படி கேட்கப்படவில்லை.
மேற்குலகில் உள்ள அரசுகள் நிறுவனங்கள், மக்கள், ஊடகங்கள் அத்தனையுமே காலனீயம், வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, போன்ற கண்ணாடிகள் ஊடாகவே உலகை உற்றுநோக்குகின்றன என்று த நியூ ஹியுமானிற்றேறியன் (The New Humanitarian) என்ற இதழின் ஆசிரிய தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேன் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு யுத்தத்தைப் போற்றிப்புகழ்கின்ற மேற்குலகம், ஆக்கிரமிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு போன்ற தீமைகளுக்கு எதிராகப் போராடுகின்ற பாஸஸ்தீனர்களின் எதிர்ப்புப் போராட்டங்களில் உள்ள நியாயத்தை ஏற்க மறுக்கின்றன.
எவ்வாறு இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் ஒரு சிறிய நிலத்துண்டுக்குள் அடக்கப்பட்டிருக்கிறார்கள் என்றோ அல்லது எவ்வாறு இப்பிரதேசத்தின் மேல் 16 வருடங்கள் நீடித்த பொருண்மியத் தடைகள் இப்பிரதேசத்தை ஒரு ‘திறந்தவெளிச் சிறைச்சாலையாக’ மாற்றியிருக்கின்றது என்பது பற்றியோ விவாதிக்க எந்த ஊடகங்களும் ஆயத்தமாக இல்லை.
‘ஊடக நடுநிலைமை’ என்ற விடயத்தைக் காரணங்காட்டி, காஸாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் தொடர்பாக ஊடகங்கள் மேற்கொள்ளும் பதிவுகள் அங்கு இருக்கின்ற உண்மையான நிலைமையைப் பதிவுசெய்யத் தவறுகின்றன. உண்மையைச் சொல்லப் போனால், ஊடக நடுநிலைமையை அடிப்படையாகக்கொண்டு எவ்வாறான செய்திகளைப் பதிவுசெய்யலாம் என்ற விடயம் எப்போதுமே தெளிவாக வரையறை செய்யப்படுவதில்லை. எவ்வாறான பண்பாட்டில், எவ்வாறான விழுமியங்களின் அடிப்படையில் அந்த ஊடகங்கள் இயங்குகின்றனவோ அந்த விடயங்களின் அடிப்படையிலே தான் ஊடக நடுநிலைமை வரையறை செய்யப்படுகிறது.
“ஒரு தேசத்தின் ஊடக அணுகுமுறை அந்த சமூகம் மேற்கொண்டிருக்கும் வரையறைகளை மீறிச் செல்ல முடியாது. அதே நேரம், அது பிற்போக்கானதாகவும் இருக்க முடியாது” என்று மறைந்த அமெரிக்க ஊடக அறநெறிக் கோட்பாட்டாளரான ஜோண் கால்~ஹ_ண் மெறில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இவ்வாறான பாரபட்சங்களைப் விளங்கிக்கொள்வதற்கு ஊடகத்தின் மீது பண்பாடு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். இவ்வாறான விடயங்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. காஸாவில் நடைபெறும் போரை ஊடகங்கள் பதிவுசெய்யும் முறையை அவதானிக்கும் போது, வெளிப்படையாகப் பேசப்படாத சமூக வரையறைகள் ஊடகத் தர்மத்தை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இங்கே ஒரு வித தணிக்கை நடைமுறையில் இருப்பதை நாங்கள் அவதானிக்கலாம். எந்தவிதமான நிபந்தனையுமற்ற விதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டிலிருந்து விலகிக்சென்று, பாலஸ்தீன மக்களை மனிதாயக் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய கருத்துகள் வெளிவராது தடைசெய்யப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீனக் கொடியைத் தாங்கிச்செல்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களால் இயக்கப்படும் ஊடகங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான கருத்துகள் நீக்கப்படுகின்றன.
இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலின் உண்மையான பின்னணி என்ன என்பதை விவரிக்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு அமெரிக்க செய்திச்சேவைகளில் பணியாற்றும் செய்தி ஆசிரியர்கள் தூண்டுவதாகச் சொல்லப்படுகின்றது. அதற்குக் காரணம் கேட்பவர்களுக்கு அதனை ஜீரணிப்பது கடினமானதாகவே இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
இது எவ்வாறு இருப்பினும், இங்கு தணிக்கை என்பது போதுமான விளக்கமாக இருக்காது. மெறில் சுட்டிக்காட்டியது போல, சமூகம் முற்போக்குப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் ஊடகங்கள் பின்னே நிற்க முடியாது. ஊடகவியலாளர்களை வழிநடத்துகின்ற அறநெறிக்கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களைப் பார்க்கின்ற போது, இந்தக் கோட்பாடுகளும் விழுமியங்களும் தனியே ஊடகவியலாளர்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. உண்மையில் சமூகம் ஊடகவியலாளர்களிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதையே அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஒட்டுமொத்தத்தில், இஸ்ரேலைப் பற்றியும் காஸாவைப் பற்றியும் மேற்கொள்ளப்படும் ஊடகப் பதிவுகள், அங்கே உண்மையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. அதற்கு மாறாக, அவை குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் எவ்வாறான பண்பாட்டுப் பின்புலங்களிலிருந்து அவர்கள் வருகிறார்கள் என்பதையுமே வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று ரீதியாக, யூத மக்களுக்கு எதிரான பார்வையும் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பும், மேற்குலக பண்பாட்டுக் கருத்துருவாக்கத்தின் முக்கிய விடயங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் மக்கள் இன்று எவ்வாறு இனத்துவ ரீதியாக வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்களோ அவ்வாறு தான் யூத மக்களும் ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள். அவ்வப்போது இனக்கலவரங்களாலும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் ஹிட்லரினால் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், யூத மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட பின்னர், யூத மக்களை வெறுக்கும் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்ற நிலைக்கு மேற்குலகம் வந்தது.
இதற்கு மாறாக அரபு மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான உணர்வுகள் இவ்வாறு தணிக்கைசெய்யப்படவில்லை. அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கபப்பட்ட ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ இவ்வாறான உணர்வுகளை மென்மேலும் அதிகரித்திருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்க எதிரான போரை இஸ்ரேலும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராகவே காட்சிப்படுத்துகிறது.
இவ்வாறான ஒரு பின்புலத்தில், யூத மக்களின் மனிதத்தை ஏற்றுக்கொள்வதாயின் முஸ்லீம்கள் என்றோ அரேபியர்கள் என்றோ அழைக்கப்படுபவர்களின் மனிதம் களையப்படுவதையே அது குறிக்கிறது என்று மேற்குலகில் உள்ள பலர் நம்புகிறார்கள்.
இஸ்ரேல் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அதற்கு உரிமை உண்டு. இதற்காகப் பாலஸ்தீன மக்கள் மீது எவ்வகையான அட்டூழியங்களும் மேற்கொள்ளப்படலாம் என்ற சிந்தனை அந்த தேசம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இருந்துவருகிறது. இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ்வதற்காகப் பாலஸ்தீன எவ்வகையான விலையையும் கொடுக்கலாம் என்ற பார்வையை மேற்குலகம் கொண்டிருக்கிறது.
இதற்கு மாறாக, இஸ்ரேலின் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியைக் குறிப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மேற்குலகத்தால் பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்மையில் தெரிவித்த கருத்துகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
இஸ்ரேல் – காஸாப் போர் தொடர்பாக மேற்குலக ஊடகங்கள் மேற்கொள்ளும் பதிவுகள் அத்தனையுமே இந்தப் பண்பாட்டு முரண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. இஸ்ரேல் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகக் கடுமையான கண்டனம் பதிவுசெய்யப்படும் அதே நேரம், பாலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துன்பங்களோ எந்தவித முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
சாவுகளைப் பதிவுசெய்யும் போது இவ்வகையான கணிப்பீடு வெளிப்படுகின்றது. பாலஸ்தீன மக்களின் சாவுகள் தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களிலும் தொலைக்காட்சிச் செய்தியறிக்கைகளிலும் மிகவும் அதிகமாகப் பதிவுசெய்யப்படுகின்றது. இஸ்ரேல் மக்களின் சாவுகள் இவற்றில் அதிகம் பதிவுசெய்யப்படவில்லை. அதே நேரம், தலைவெட்டப்பட்ட குழந்தைகள் பற்றிய செய்தி ஒன்றே இஸ்ரேல் மக்களின் சாவைப் பதிவுசெய்யப் போதுமானதாக இருக்கின்றது. பாலஸ்தீன மக்களின் குரூரமான சாவுகளைப் பதிவுசெய்ய மிக அதிகமான விடயங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
மேற்குலக அரசுகள் ஹமாசை ஒரு பயங்கரவாத அமைப்பாக வரையறைசெய்திருக்கின்றன என்ற செய்தி மேற்குலக ஊடகங்களால் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றது. அதே நேரம் இஸ்ரேல் இனவெறி பிடித்த ஒரு அரசு என்பதைப் பதிவுசெய்ய மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகளும் தயங்குகின்றன.
இஸ்ரேல் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போது, அவை யூத மக்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப்படுகின்றது. அரபு மக்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்படும் உணர்வுகளை விட இது மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு சொன்னபின்னர், பண்பாடு என்பது ஒரு கூட்டுச்சேர்க்கை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது எப்போதும் தெளிவானதாக இருப்பதில்லை. எனவே குறிப்பிட்ட பண்பாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு தனிநபரும் இதனை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள் கொள்ள முடியாது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் ஊடகங்களின் மனப்பாங்குகளில் பண்பாடு தாக்கம் செலுத்துகின்றது என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அதே நேரம் ஊடகவியலாளர்களுக்கு அது ஒரு வரையறையையும் தருகிறது.
தங்களைப் போலவே இருக்கின்ற, தங்களைப் போலவே சிந்திக்கின்ற ஒரு பார்வையாளர் இருந்த காலத்திலேயே ஊடக அறநெறிக்கோட்பாடுகள் வரையறை செய்யப்பட்டன என்ற உண்மையை ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று, செய்தியறிக்கைகள் உலகம் முழுவதிலும் உடனடியாக ஒலிபரப்பப்படும் போதோ அன்றேல் ஒளிபரப்பப்படும் போதோ, பண்பாட்டுக் குருட்டுத்தனங்கள் அறநெறிக்கோட்பாடுகளுக்கு எதிரானவையாகப் பார்க்கப்படக்கூடும். இனவழிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்புகள் இவற்றுள் அடங்கும். செய்திகளை அவர்கள் வடிவமைக்கும் முறைகள் தொடர்பாகவும் செய்திகளை அவர்கள் பதிவுசெய்யும் முறைகள் தொடர்பாகவும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை ஊடகவியலாளர்கள் கவனமாகச் செவிமடுக்க வேண்டும். உண்மையில் அவ்வாறு செய்வதாயின் தன்-விழிப்புணர்வு ஊடகவியலாளர்களுக்கு அவசியமானதாகும். ஊடகவியலாளர்கள் பலர் இந்த தன்-விழிப்புணர்வை வெளிப்படுத்தத் தவறிவிட்டார்கள் என்பதே யதார்;த்தமாகும்.
தமிழில்: ஜெயந்திரன்
நன்றி: அல்ஜஸீரா