இலங்கை முதலீட்டு சபை மற்றும் சினொபெக் எனர்ஜி லங்கா தனியார் நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைத்து, எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை (14) கையெழுத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்துக்கமைய சினொபெக் நிறுவனம் 100 மில்லியன் டொலர் முதலீட்டில் எரிபொருள் இறக்குமதி, களஞ்சிப்படுத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்கவுள்ளது.
அதற்கமைய, தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவும் வேலைத்திட்டம் இதில் உள்ளடங்குவதாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டம் இலக்கம் 17க்கு இணங்க, சினோபெக் எனர்ஜி லங்காவின் மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டத்திற்கு 20 வருட செயல்பாட்டுக் காலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சினோபெக் நிறுவனம் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், 500 பி.பி.எம். டீசல், டீசல் 10 சி.ஓ.பி.பி.எம்., விமான எரிபொருள் மற்றும் ஏனைய டீசல் மற்றும் பெற்றோலிய உற்பத்தி சார் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு சபையுடனான இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும், சினொபெக் நிறுவனம் வலு சக்தி அமைச்சுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.