இலங்கையை எவ்வாறு கையாள்வது? அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்கிறது டில்லி

இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக புதுடில்லி வட்டாரங்களை ஆதாரங்காட்டி இந்தியாவின் பிரபல தினசரியான ‘தி பிரின்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ‘தி பிரின்ட்’ மேலும் தெரிவித்துள்ளதாவது;

“ராஜபக்க்ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின்றது.

கடந்த மாதம் இலங்கை பாராளுமன்றம் சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு திட்டத்தை இலங்கை நிறைவேற்றியது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும், கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குள் ஒரு சீன மாகாணமாக மாறலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியிலும் இலங்கைப் பாராளுமன்றம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றியது.

உத்தேச புதிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு பரந்துபட்ட அதிகாரங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது. மேலும் இலங்கையின் மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்டமூலங்கள் கொழும்பு துறைமுக நகரை கட்டுப்படுத்தாது. இதன்காரணமாக இது ஜனநாயக ரீதியில் செயற்படாது என்ற கரிசனைகள் காணப்படுகின்றன.

கொழும்புதுறைமுகநகரம் காரணமாகவும்,- அம்பாந்தோட்டை துறைமுகநகரத்திற்கு என்ன நடந்தது என்பதன் காரணமாகவும் (கொழும்பு 99 வருட குத்தகையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது என்ற ஊகங்களிற்கு மத்தியில்) இலங்கை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என தெரிவித்த ஒரு வட்டாரம் இந்தியாவிற்கு இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம், இந்திய அரசாங்கங்களிற்கும் சவால்கள் ஏற்படலாம் என தெரிவித்தது.

இந்திய – இலங்கை உறவுகள், கடந்த பெப்ரவரியில் இலங்கை முத்தரப்பு கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. அதற்கு பதில் இலங்கை இந்தியாவிற்கு மேற்குகொள்கலன் முனையத்தை வழங்கியது – அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்படிக்கை போலயில்லாமல் தனியார் உடன்பாடு போன்று இது வழங்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் ராஜபக்க்ஷ சகோதாரர்களிற்கும் இடையிலான ஆரம்ப காலநட்புறவு தற்போது மறையத்தொடங்கியுள்ளது என்பது தெளிவான விடயம் என தெரிவித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியாவிற்கு முதலிடம் என்ற இலங்கையின் கொள்கை வேகமாக காணாமல்போகின்றது என தெரிவித்தன. சீனா, இலங்கையை இந்தியாவிலிருந்து விலக்கிகொண்டு சென்றுள்ளதால் இது இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது பிரசன்னத்தை பேணலாம் என சீன கருதுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜபக்‌ஷ அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.