இலங்கையில் 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 561ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 88 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,  தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 858 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தல் தொடர்பான சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து விரைவில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.