அமைதிப் பேரணியில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது அரசபுலனாய்வாளர்களால் ஏவப்பட்ட சிங்களக் கும்பல்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்இ இலங்கையில் நல்லிணக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்ட அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழ் மக்களுக்கு சமாதானத்தையும் நீதியையும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த திலீபனை நினைவுகூரும் வகையில் அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் மீது சிங்களக் கும்பல்கள் நடத்திய கொடூரத் தாக்குதல், இலங்கைத் தீவில் அமைதியான சகவாழ்வுக்கு சிங்களவர்களால் இயலாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியான செல்வராஜா கஜேந்திரனையும் இந்த கும்பல் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
பொத்துவிலில் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி, இலங்கைஇராணுவம் மற்றும் துணைப்படையினரின் தூண்டுதலின் பேரில் வடக்கிற்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் சிங்களக் கும்பல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்களை நிறுத்துவதற்கு எதுவும் செய்யப்படவில்லை, சிங்களவர்களை மட்டுமே கொண்ட பொலிசாரின் மெத்தனப்போக்கு தாக்குதல் நடத்தியவர்களுக்கு மேலும் ஒத்தாசை வழங்குவது போல் அமைந்தது. இது ஒரு திட்டமிட்ட அரசபயங்கரவாதமாகவே தமிழ் அமைப்புகளால் பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றன. இலங்கை பொலிசார் தாக்குதலை நிறுத்துவது போல் நாடகமாடிய நிலையில், அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கள் மீதான தாக்குதல்இ இலங்கை அரசாங்கமும் அதன் சிங்கள மக்களும் நல்லிணக்கத்திற்கு தயாரில்லை என்பதை நிரூபிக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய தருணம் இது, ஏனெனில் அவர்களின் ‘நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்கள்’ தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தாக்குதலுக்கு உள்ளாக்கும் அதே வேளையில் சிங்களவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கப்படுவதற்கு மட்டுமே வழிவகுத்துள்ளன.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்பதை ஐக்கிய நாடுகள் சபையும்இ இலங்கையில் நல்லிணக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அரசாங்கங்களும் உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லிணக்கம் என்ற சொல் தீவில் தமிழ் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவு என்பதற்கு ஒத்ததாகும். ஈழத் தமிழ் மக்கள் ஒரே பதாகையின் கீழ் ஒன்றிணைந்து ஒடுக்குமுறையாளர்களிடம் இருந்து விடுதலைக்காகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவ்வாறு செய்யத் தவறினால், நடந்து வரும் இனப்படுகொலை நீடிக்கும்.
ஸ்ரிவன் புஸ்பராஜா. க
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-