இலங்கையில் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு!!

இலங்கையில் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   இவ்விடயம் தொடர்பான சட்டமூலத்தை ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது.

தொழில் அமைச்சின் அதிகாரிகளுடன், தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள்,  தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகள் ஆகியோரும்  மேற்படி பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி பேச்சுவார்த்தை தொழில் ஆலோசனை சபையின் ஏற்பட்டில் நடைபெறுவதாகவும், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச்சேவைகள் ஊழியர் சங்கம் ஆகியனவும் பங்கேற்கவுள்ளதாகவும்  சங்கத்தின் செயலாளர் அன்ரன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு கடந்த வரவுசெலவு திட்டத்தின் போது அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கடந்த 24 ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் பெண்களின் ஓய்வூதிய வயதெல்லை 50 ஆகவும், ஆண்களின் ஓய்வூதிய வயதெல்லை 55 ஆகவும் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.