இலங்கையில் செயலகம் அமைத்தல் – பின்னடைவை சந்திக்கும் ஐ.நா.

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் தனியான செயலகத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஐ.நா. பின்னடைவைச் சந்தித்துள்ளது.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

“அந்தச் செயலகத்தை நடத்திச் செல்வதற்காக பேரவையிடம் கோரியிருந்த நிதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைக் குறைத்து வழங்கவே அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது ஐ.நாவின் பின்னடைவையே காட்டுகின்றது” எனவும் அவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பணிகளை முன்னெடுக்கவென பேரவையின் கிளைச் செயலகத்தை இலங்கையில் அமைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆதாரங்களைச் சேகரித்தல், பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 13 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தச் செயலகத்தை அமைக்கத் தீர்மானிக்ககப்பட்டது. அதற்காக நடப்பு ஆண்டுக்காக 28 இலட்சத்து 56 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தச் செயலகத்துக்கான புதிய பதவிகளுக்கெனப் புலனாய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டிருந்தன.

ஆனால், இந்த விடயத்தில் ஐ.நா.பின்னடைவைச் சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா. தலைமையகத்தின் முழுமையான அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply