இலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன? (நேர்காணல்)-வைத்தியர் சோபனா சதானந்

416 Views

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பில் வவுனியா வைத்தியசாலையில் சுவாச நோய்கள் பிரிவில் பணியாற்றி வருபவரும், தற்போது வெலிகந்தை கோவிட்-19 நோய் வைத்தியசாலையில் பணியாற்றுபவருமான வைத்தியர் திருமதி சோபனா சதானந்த் உடன் நாம் சிறு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.

அவர் கூறிய கருத்துக்களை இங்கு தருகின்றோம்.

கேள்வி: இலங்கையில் தற்போது இந்த நோயின் தாக்கம் எவ்வாறு உள்ளது அங்கு எந்த வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் அங்கு நோயின் பரவல்கள் கட்டுப்படுத்தப்படும் போதும், தற்போது இது அதிகம் பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக தனிமைப்படுத்தல் முகாம்களில் பணியாற்றும் படையினருக்கு பரவும் இந்த நோய் அவர்கள் மூலம் ஏனைய மக்களுக்கும் பரவி வருகின்றது.

இலங்கையில் கொழும்பில் உள்ள தொற்றுநோய் வைத்தியசாலை (ஐ.டி.எச்), காத்தான்குடி வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை மற்றும் வெலிகந்தை வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அக்கராயன்குளத்திலும் வடமாகாண மக்களுக்கான சிகிச்சை நிலையம் ஒன்றை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் வெலிகந்தையில் பணியாற்றி வருகின்றீகள், அங்கு என்ன வகையான சிகிச்சைகளை வழங்குகின்றீர்கள்?

இங்கு நாங்கள் சிகிச்சை அளிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் அற்றவர்களாக காணப்படுகின்றனர். அதாவது காச்சல், அதிக உடல் வெப்பம், இருமல், தெண்டை வலி, சுவாசிப்பதில் கடினம் போன்ற கோவிட்-19 இற்கான அடிப்படை அறிகுறிகள் அற்றவர்கள்.

அவர்களுக்கு நாம் அடிப்படை சிகிச்சைகளையே வழங்குகின்றோம், இது ஒரு வைரஸ் நோய் மற்றும் புதிய நோய் எனவே அதற்கான மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை, இந்த நிலையில் நாம் நீராவி உள் எடுத்தல், உப்பு நீரால் கொப்பளித்தல், விற்றமின் மாத்திரைகளை வழங்குதல் போன்ற சிகிச்சைகளை எல்லோருக்கும் வழக்குகின்றோம்.IMG 2546e4490605573fc0951403f5ac594b V இலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன? (நேர்காணல்)-வைத்தியர் சோபனா சதானந்

எனினும் முன்னர் நாம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஈ.சி.ஜி எனப்படும் இதயத்தை பரிசோதனை செய்யும் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், இதயம் நன்கு செயற்படுபவர்களுக்கு குளோரோகுயின் அல்லது கைறொக்சிகுளோரோகுயின் (Chloroquine, hydroxychloroquine) எனப்படும் மலேரியா மருந்தினை கொடுத்து வந்தோம்.

ஆனால் தற்போது சிறீலங்கா அரசின் புதிய விதிகளின் பிரகாரம் அதனை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்குகின்றோம். அதனை நாம் 10 நாட்களுக்கு தொடர்ந்து வழங்குகின்றோம்.

கேள்வி: வெலிகந்தை வைத்தியசாலையில் செயற்கை சுவாசக் கருவிகள் உண்டா?

முன்னர் இங்கு இயங்கிய அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கருவி இருந்தது, எனினும் எம்மிடம் அதனை இயக்குவதற்கு உரிய போதிய தொழில்நுட்ப வசதிகள், அதற்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால் அது தற்போது கொழும்பு தொற்றுநோய் வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே தற்போது வெலிகந்ததை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நோய் அறிகுறிகள் அதிகரித்தால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமப்பட்டால் அவர்களை நாம் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவோம்.

கேள்வி: நோய் அறிகுறிகள் காண்பிக்காதவர்களை எவ்வாறு கண்டறிகிறீர்கள்?

நோய் அறிகுறிகள் உடன் உள்ளவர்களை உறுதிப்படுத்திய பின்னர் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் எனப்படும் சோதனைகள் மூலம் நோய் அறிகுறிகள் அற்ற கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

கேள்வி: நோயாளிகள் குணமாகியதை எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்?

நோயாளிகளின் சுவாச விகிதம், ஒக்சிஜின் அளவு என்பவற்றை எமது மருத்துவர்கள் தொடாந்து அவதானித்து வருவார்கள், அது மட்டுமல்லாது நான் முன்னர் கூறிய சிகிச்சைகளும் வழங்கப்படும், 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நோய் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர் வைத்தியசாலையில் கொரோனா நோயளர் அற்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார், பின்னர் மீண்டும் 15 ஆம் நாள் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அதிலும் அவருக்கு நோய் குணமாகியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்.

14 நாள் சோதனையின் போது நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் மீண்டும் அவருக்கு 7 நாட்களின் பின்னர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: இலங்கையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதற்கு உரிய மருத்துவ காரணம் ஏதும் உண்டா?

இது ஒரு வைரஸ் நோய் எனவே எமது நோய் எதிர்ப்பு சக்தியே முக்கியமானது. நோய் அறிகுறிகள் அற்ற நோயளர்கள் என்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தான் காரணம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கே அதிகம் அறிகுறிகள் தென்படுகின்றன.

நோய் அறிகுறிகள் குறைவடையும் போது இறப்பு விகிதமும் குறைகின்றது. மேலும் வேறு நோய்கள் உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் பரவாது தற்போது தடுக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Leave a Reply