இலங்கையில் ஆதார் அடையாள அட்டையை கொண்டுவர இந்தியா முயற்சி

இலங்கை மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முகமாக தனித்துவமான அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா 450 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது.

அறிமுகப்படுத்தப்படும் புதிய அடையாள அட்டையில் மக்களின் முக அடையாளம், கண் அடையாளம், கைரேகை அடையாளம் உட்பட பல உயிரியல் தகவல்கள் உள்ளடக்கப்படவுள்ளன. இதன் மூலம் இலங்கை மக்களை இலங்கை அரசும், இந்திய அரசும் தொடர்ந்து கண்காணிப்புக்குள் வைத்திருக்க முடியும்.

கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே நிதியை கையளித்திருந்தார்.

எனினும் இந்த தொழில்நுட்பத்தை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் பயன்படுத்துவதன் மூலம் இலங்கை மக்களினது சுயாதீனத்தன்மை பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை கண்காணிப்பதற்கு இலங்கை அரசு அதனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் இந்தய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய அடையாள அட்டைகளின் பாவனையை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தடை செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.