இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) அமுலில் உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிறப்பிக்கப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடுகள், நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், நாளை (17) தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில், ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பயணக்கட்டுப்பாடுகளால் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை,மலையகம், கிளிநொச்சி, கொழும்பு, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டம் மக்கள் நடமாட்டமின்றி இன்றும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள் கோவிட்19 காரணமாக பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் நேற்று (15) காலை 10.00 மணி தொடக்கம் இன்று (16) காலை 10.00 மணி வரையான தகவல்கள் மூலமான புள்ளி விபரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் பிரகாரம் 24 மணி நேரத்திற்குள் 55 புதிய கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இதில் 57 PCR மாதிரிகளும் 206 அன்டிஜன் மாதிரிகளூம் பெறப்பட்டுள்ளது.
மூதூர் சுகாதார பிரிவில் 22,திருகோணமலை சுகாதார பிரிவில் 11,கிண்ணியா 06,குறிஞ்சாக்கேணி 06, குச்சவெளி 04,திருகோணமலை 02, உப்புவெளி 02, கந்தளாய் 02 என மொத்தமாக புதிய 55 தொற்றாளர்கள் 24 மணி நேரத்தினுள் அடையாளப் படுத்தப் பட்டுள்ளார்கள்.
மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் (மே மாதம்) மட்டும் தற்போது வரை 709 கோவிட் தொற்றாளர்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டம் முழுதும் 2150 தொற்றாளர்கள் மொத்தமாக இணங்காணப்பட்டுள்ளார்கள்.
24 மணி நேரத்தில் மரணப் பதிவாக திருகோணமலை சுகாதார பிரிவில் 01,உப்புவெளி01, கிண்ணியா 01, மூதூர் 01, கந்தளாய் 01 என ஐந்து தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வவுனியா நகரில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப் படுகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் ஒரு இலட்சத்து 40, 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.