இலங்கையின் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் -அமைச்சர் சுதர்ஷினி

இலங்கையின் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகின்றது என ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எச்சரித்துள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்க முடியுமான நோயாளர் தொகை உச்சத்தை எட்டியுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் அதிகமான நோயாளர்களை மருத்துவமனைகளில் வைத்து, சிகிச்சையளிக்கும் வசதிகள் குறைந்துகொண்டு செல்கின்றன எனவும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் குறைவாக இருக்கின்றன எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தெரியவரும் வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 16 ஆயிரத்து 720 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.