இலங்கையின் பொறுப்புக்கூறலுக்காக பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது: வெளிவிவகார அமைச்சர்

193 Views

இலங்கையின்  இடம்பெற்றதாக  கூறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிற்காக ஆதரங்களை திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களில் பிரித்தானியா தொடர்ச்சியாக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது என அந்நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 

பிரித்தானிய கார்ஷால்டன் மற்றும் வொலிங்டன் தொகுதியின்  பாராளுமன்ற  உறுப்பினரான எலியட் கோல்பேர்ன் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்விருவருக்கும் இடையில் இடம்பெற்ற கேள்வி பதில்கள் வருமாறு,

எலியட் கோல்பேர்ன்:- இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைத் வெளிப்படுத்தவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளை அவர் (அமைச்சர் நைஜல் அடம்ஸ்) எடுத்துள்ளார்?

அமைச்சர் நைஜல் அடம்ஸ்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின்போது  இலங்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு  ஐ.நா.வின்  கண்காணிப்பை மேம்படுத்தும் வகையிலான புதியதொரு புதிய தீர்மானத்தை வெற்றிகரமாக வழிநடத்தி நிறைவேற்றியுள்ளோம்.

அத்தீர்மானத்தில் முதன்முறையாக, எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு தேவையான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம்.

எலியட் கோல்பேர்ன்:- போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நம்பத்தகுந்த இலங்கை அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை விதிப்பதற்கு, தேவையான சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளதா?

அமைச்சர் நைஜல் அடம்ஸ்:  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம் பல ஆண்டுகளாக சர்வதேச ரீதியாக நடவடிக்கைகளை எடுத்துவருவது நண்பருக்குதெரியும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த  மார்ச்  மாதக் கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் “மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல்” இது எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளை ஆதரிக்கப் பயன்படும். என்ற விடயம் உள்ளீர்க்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.

நன்றி – வீரகேசரி

Leave a Reply